பொள்ளாச்சியில் ஆமை வேகத்தில் நடைபெறும் மேம்பால பணி : மக்கள் அவதி..!

பொள்ளாச்சியில் ஆமை வேகத்தில் நடைபெறும் மேம்பால பணி : மக்கள் அவதி..!

ஆமை வேகத்தில் நடைபெறும் பாலப் பணிகள்

பாலாற்றின் குறுக்கே மேம்பால பணிகளை விரைந்து செய்ய வேண்டுமென பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த சோமந்துறை சித்தூர் இருந்து பொள்ளாச்சி செல்லும் வழியில் பாலாற்றின் குறுக்கே மேம்பாலம் கட்டுவதற்கான பணிகள், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஏழு கோடி மதிப்பீட்டில் துவங்கியது. இந்தக் கட்டுமான பணியை ஓராண்டுக்குள் முடிக்க ஒப்பந்தமும் செய்யப்பட்டிருந்தது. ஆனால் பணிகள் துவங்கி இரண்டு ஆண்டுகளைக் கடந்த நிலையிலும், பணிகள் முடிவடையாமல் ஆமை வேகத்தில் வேலை நடைபெற்று வருகிறது.

இந்த சாலை சோமந்துறை சித்தூரில் இருந்து பொள்ளாச்சி செல்வதற்கு பிரதான சாலையாக இருக்கிறது. மேம்பாலம் கட்டுவதற்கு முன்பாக தற்காலிக பாலம் கட்டப்பட்டு இருந்த நிலையில், கடந்த ஓராண்டுக்கு முன்பாக ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. அடித்து செல்லப்பட்ட தரைப்பட்ட பாலம் இன்னும் சரி செய்யாமல் இருப்பதாலும், ஆற்றின் குறுக்கே ஆங்காங்கே கட்டுமான பணிக்காக கம்பிகள் மற்றும் கற்களை கொட்டி உள்ளனர். இதன் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் தென் சங்கம்பாளையம் மற்றும் சுங்கம் வழியாக எட்டு கிலோமீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டு வருகிறது.

இருசக்கர வாகனத்தில் வருவார்கள் இவ்வழியாக பயணிக்கும் போது, கரடு முரடான பாதைகளை கடந்து உயிர் பயத்தில் தான் கடந்து செல்ல வேண்டியிருப்பதாகவும், ஒரு சிலர் இவ்வழியாக பயணிக்கும் போது கீழே விழுந்து அடிபடும் சூழல் உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். அதனால் பாலாற்றின் குறுக்கே மேம்பால பணிகளை விரைந்து செய்ய வேண்டுமென பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story