கோரிக்கைகளுக்கு அதிகாரிகள் உரிய பதில் அளிப்பது இல்லை: விவசாயிகள் குற்றச்சாட்டு

கோரிக்கைகளுக்கு அதிகாரிகள் உரிய பதில் அளிப்பது இல்லை: விவசாயிகள் குற்றச்சாட்டு
X

பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் முறையீட்டுக்குழு கூட்டம்

விவசாயிகள் கோரிக்கைகளுக்கு அதிகாரிகள் உரிய பதில் அளிப்பது இல்லை என்று முறையீட்டுக்குழு கூட்டத்தில் விவசாயிகள் குற்றம்சாட்டி பேசினார்கள்.

பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் முறையீட்டுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சப்-கலெக்டர் பிரியங்கா தலைமை தாங்கினார். கூட்டத்தில் விவசாயிகள் கலந்துகொண்டு பல்வேறு கோரிக்கைகள் குறித்து பேசினார்கள். அப்போது அவர்கள் கூறியதாவது:-

ஒவ்வொரு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கைகளை மனுவாகவும், வாய்மொழியாகவும் தெரிவிக்கின்றனர். ஆனால் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் இருந்து எந்த பதிலும் கிடைப்பதில்லை. இதனால் விவசாயிகள் முறையீட்டுக்குழு கூட்டம் நடத்தி எந்த பயனும் இல்லை.

தென்னை மரத்தில் நோய் தாக்குதல் அதிகமாக உள்ளது. ஆனால் வேளாண்மை துறை அதிகாரிகள் விவசாயிகளுக்கு நோய் தாக்குதலை கட்டுப்படுத்த எந்த அறிவுரையும் வழங்குவதில்லை. கிராமங்களில் கூட்டம் நடத்தினாலும் பெரும்பாலான விவசாயிகளுக்கு தெரிவதில்லை.

கால்நடைகளுக்கு தற்போது வயிற்றுப்போக்கு அதிகமாக உள்ளது. எனவே கிராமங்களில் சிறப்பு முகாம் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆழியாறு பீடர் கால்வாய், சேத்துமடை கால்வாய்களை சீரமைக்க கோரி பலமுறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. பாசன சபை நிர்வாகிகளின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் ஆகும். ஆனால் பாசன சபை தலைவர் தேர்தல் நடத்தி பகிர்மான குழு தலைவருக்கு தேர்தல் நடத்த ஒராண்டு ஆகிவிட்டது. எனவே திட்டக்குழு தேர்தலை விரைவில் நடத்த வேண்டும்.

ஆனைமலை ஒன்றியத்தில் சாலை பணிகள் தரமில்லாமல் மேற்கொள்ளப்படுகிறது. இதுகுறித்து ஆய்வு நடத்த வேண்டும். ஆனைமலை வேளாண்மை துறை அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. எனவே பழைய கட்டிடத்தை ஆனைமலை ஒன்றிய திருமண மண்டபத்திற்கு இடமாற்றம் செய்து கொடுக்க வேண்டும்.

விவசாய பயிர்களை காட்டு பன்றி சேதப்படுத்துகிறது. கேரளாவில் தொல்லையை ஏற்படுத்தும் காட்டு பன்றிகளை சுட்டுக் கொல்ல அனுமதி கொடுக்கப்பட்டு உள்ளது. இதேபோன்று தோட்டங்களில் தொந்தரவு செய்யும் காட்டு பன்றிகளை சுட்டுக் கொல்ல அனுமதி அளிக்க வேண்டும்.

நெல்லுக்கு ஒரு குவிண்டாலுக்கு ரூ.100 உயர்த்தப்பட்டு உள்ளது. ஆனால் இதுவரைக்கும் விவசாயிகளுக்கு கூடுதல் தொகை கிடைக்கவில்லை. ஆனைமலை ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆச்சிப்பட்டியில் புதிதாக வீட்டுமனைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த பகுதியில் உள்ள கால்வாயில் அடைப்பு ஏற்படுவதால் தண்ணீர் தேங்கி நிற்பதால் கடைமடைக்கு தண்ணீர் செல்வதில்லை. இதுகுறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்.

கூட்டத்தில் நேர்முக உதவியாளர் அரசகுமார், திருமூர்த்தி நீர்தேக்க திட்டக்குழு முன்னாள் தலைவர் மெடிக்கல் பரமசிவம், ஆழியாறு புதிய ஆயக்கட்டு பாசன சங்க செயலாளர் செந்தில், விவசாயிகள் பட்டீஸ்வரன், ஆறுமுகம் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story