மக்களை அச்சுறுத்தி வந்த மக்னா யானையை பிடித்து வனப்பகுதியில் விட்ட வனத்துறை
பைல் படம்
கடந்த மாதம் தர்மபுரி மாவட்டத்தில் விவசாய நிலங்களை சேதப்படுத்தியும், மக்களை அச்சுறுத்தியும் வந்த மக்னா யானையை வனத்துறையினர் பிடித்து பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பக டாப்சிலிப் வனப்பகுதியில் விட்டனர்.
இந்நிலையில் வனப்பகுதியை விட்டு வெளியேறிய யானை மதுக்கரைக்கு சென்றது. பின்பு மீண்டும் அதே யானையை பிடித்து ஆனைமலை புலிகள் காப்பகம் வனப்பகுதியான மானாம்பள்ளி மந்திரி மட்டம் பகுதியில் வனத்துறையினர் விட்டனர். வால்பாறை பகுதிகளில் உலா வந்த மக்னா தனியார் தோப்புகளுக்குள் உலா வந்துள்ளது.
இந்நிலையில் 4 குழுக்களாக வனத்துறையினர் பிரிந்து யானையை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். மேலும் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கும்கி யானைகளான முத்து, சின்னத்தம்பி மற்றும் ராஜவர்த்தன் ஆகிய யானைகள் சரளபதி பகுதியில் மக்னாவை கட்டுப்படுத்த நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று காலை சரளப்பதி அருகே உள்ள தனியார் மாந்தோப்பில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட வனத்துறை யினரின் வாகனத்தை மக்னா யானை தாக்கியது. இந்த தாக்குதலில் வாகன ஓட்டுநர் மணிகண்டன், வனவர் மெய்யப்பன், வனக்காப்பாளர் ராஜ், வேட்டை தடுப்பு காவலர்களான அகிலேஷ் மற்றும் மணி உள்ளிட்ட ஆறு பேர் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இதில் வனந்துரையினரின் வாகனம் சேதமானது. வேட்டைக்காரன் புதூர் அரசு மருத்துவமனையில் வேட்டை தடுப்பு காவலர்கள் சிகிச்சை பெற்றனர். மேலும் வனத்துறையினர் மக்னா யானையை காட்டுக்குள் விரட்டும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் மக்னா யானையின் கழுத்தில் பொருத்தப்பட்டிருந்த ரேடியோ காலர் வேலை செய்யாததால் யானையை கண்காணிக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக வனத்துறை வட்டாரத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu