வேட்டைக்காரன்புதூர் பிரதான கால்வாயில் மூன்று ஆண்டுகளில், மூன்று முறை உடைப்பு:
வேட்டைக்காரன் புதூர் கால்வாய்
பொள்ளாச்சி அருகே, வேட்டைக்காரன்புதூர் பிரதான கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு, பாசன நீர் வீணாகி, அருகில் உள்ள தோட்டத்துக்குள் புகுந்தது. இதே கால்வாயில், மூன்று ஆண்டுகளில், மூன்று முறை உடைப்பு ஏற்பட்டதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
பொள்ளாச்சி அருகே, ஆழியாறு அணையில் இருந்து புதிய மற்றும் பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு நீர் விநியோகிக்கப்படுகிறது. அதில், ஆழியாறு அணையில் இருந்து, வேட்டைக்காரன் புதூர் கால்வாய், 17.4 கி.மீ., நீளத்துக்கு சென்று, 11,181 ஏக்கர் நிலங்களுக்கு பாசன நீர் விநியோகிக்கப்படுகிறது.
இதில், முதல் மண்டலத்தில், 5,558 ஏக்கர்; இரண்டாவது மண்டலத்தில், 5,623 ஏக்கர் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும், ஒவ்வொரு இரண்டு மண்டலத்துக்கு பாசனத்துக்கு நீர் விநியோகிக்கப்படுகிறது.
இந்த பிரதான கால்வாயில் இருந்து, மார்ச்சநாயக்கன்பாளையம் கிளை கால்வாய், பகிர்மான கால்வாய் மற்றும், ஆறு கிளை கால்வாய் வழியாக நீர் விநியோகிக்கப்படுகிறது.
இந்நிலையில், வேட்டைக்காரன்புதூர் பிரதான கால்வாயின், 7.45 கி.மீ.,ல், காளியாபுரம் அருகே இடது கரை மற்றும் கால்வாயின் படுகை முழுவதுமாக உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணானது. கால்வாய் உடைப்பு குறித்து, உடனடியாக நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு விவசாயிகள் தகவல் கொடுத்ததன்பேரில் ஆழியாறு அணையில் இருந்து உடனடியாக நீர் நிறுத்தப்பட்டது. ஆனாலும், கால்வாய் வழியாக வந்த நீர் முழுவதுமாக அருகில் உள்ள தோட்டங்களுக்குள் புகுந்தது.
காட்டுப்பன்றிகள், முள்ளம்பன்றிகள் பனங்காய்களை உண்பதற்காக கால்வாயின் மண் கரையின் விளிம்பு பகுதியில் வங்கு ஏற்படுத்தியதால், நீர்க்கசிவால் உடைப்பு ஏற்பட்டது கண்டறியப்பட்டது.
பிரதான கால்வாய் முறையாக பராமரிக்காததால் அடிக்கடி உடைப்பு ஏற்படுகிறது. பரம்பிக்குளம் ஷட்டர் உடைந்து நீர் வீணாகி தற்போது தான் சீரமைக்கப்பட்டது. தற்போது கால்வாய் உடைந்து நீர் வீணாகிறது.
வேட்டைக்காரன்புதூர் பிரதான கால்வாய், கொரோனா காலத்தில் ஒரு முறையும், கடந்தாண்டு அக்., மாதம் தண்ணீர் திறப்புக்கு முன் மதகு சேதமடைந்தது. தற்போது, மீண்டும் உடைந்துள்ளது. இது போன்று பிரச்னைக்கு காரணம், கண்காணிப்பு செய்ய ஆட்கள் இல்லாததும்; பராமரிப்பு இல்லாததும் தான்.
இந்த கால்வாய்க்கு என கால்வாய் பராமரிப்புக்கு மூன்று கரை பராமரிப்பாளர் பணியமர்த்தப்பட வேண்டும். ஆனால், பணியில் உள்ள ஒரே ஒரு பணியாளர், அவரே சேத்துமடை கால்வாயையும் கண்காணிப்பதால், முழுமையாக பராமரிக்க முடிவதில்லை. எனவே, கால்வாயை முறையாக பராமரிக்க வேண்டும். கரைகள் கண்காணிப்பு மற்றும் பராமரிக்க பணியாளர் நியமிக்க வேண்டும் என விவசாயிகள் கூறியுள்ளனர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu