ராமர் பற்றி சர்ச்சை கருத்து: தி.மு.க. பிரமுகர் வீட்டை முற்றுகையிட்ட பா.ஜ.க.

ராமர் பற்றி சர்ச்சை கருத்து: தி.மு.க. பிரமுகர் வீட்டை முற்றுகையிட்ட பா.ஜ.க.
X

பொள்ளாச்சி தி.மு.க. பிரமுகர் வீட்டை முற்றுகையிட்டு பா.ஜ.க. வினர் கோஷம் எழுப்பினர்.

ராமர் தொடர்பாக சர்ச்சை கருத்து தெரிவித்த பொள்ளாச்சி தி.மு.க. பிரமுகர் வீட்டை பா.ஜ.க. வினர் முற்றுகையிட்டனர்.

அயோத்தியில் நேற்று ராமர் கோவில் கும்பாபிஷேகம் பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பிரபலங்கள் மற்றும் சாதுக்கள் கலந்து கொண்டனர். ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, பல்வேறு திருக்கோவில்களில் பா.ஜ.க. சார்பில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. அதேசமயம் ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து, தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். இந்த நிலையில் தி.மு.க. சட்ட சீர்திருத்த குழு உறுப்பினர் தென்றல் செல்வராஜ் அவரது முகநூலில் ராமருக்கு பிடித்தது மாட்டுக் கறி பிரியாணி என பதிவு செய்திருந்ததாக கூறப்படுகிறது.

இதனைப் பார்த்த பொள்ளாச்சி நகர பா.ஜ.க.வினர் மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்டது. பா.ஜ.க. நகர தலைவர் பரமகுரு தலைமையில் தென்றல் செல்வராஜ் வீட்டை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த தகவல் கிடைத்த தி.மு.க.வினர் அப்பகுதிக்கு வர தொடங்கினர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வீட்டில் உள்ளே இருந்த தென்றல் செல்வராஜ் மகன் மணிமாறன் மற்றும் பா.ஜ.க.வினருக்கு கைகலப்பு ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது.

சம்பவ இடத்துக்கு வந்த பொள்ளாச்சி துணை கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் பா.ஜ.க.வினரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர் அனுமதி இல்லாமல் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க.வினரை காவல் துறையினர் கைது செய்து தனியார் மண்டபத்தில் வைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ராமர் தொடர்பாக கருத்து தெரிவித்த தி.மு.க. பிரமுகர் வீட்டை பா.ஜ.க.வினர் முற்றுகையிட்ட சம்பவம் பொள்ளாச்சி பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்