மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட மக்னா யானை
பைல் படம்
கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சியில், ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்த மக்னா யானை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சின்னக்கல்லார் வனப்பகுதியில் விடப்பட்டது.
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே ஊருக்குள் புகுந்து மக்னா யானை ஒன்று அட்டகாசம் செய்தது. அந்த யானையை கடந்த பிப்ரவரி மாதம் 5-ந் தேதி வனத்துறையினர் பிடித்து டாப்சிலிப் அருகே உள்ள வரகளியாறு வனப்பகுதியில் விட்டனர். ஆனால் அந்த யானை கடந்த மாதம் 22-ஆம் தேதி வனப்பகுதியை விட்டு வெளியேறி பொள்ளாச்சி ஊருக்குள் புகுந்தது. பின்னர் கோவை பேரூர் தேவி சிறை அணைக்கட்டு பகுதிக்கு சென்றது.
அந்த யானையை வனத்துறையினர் மீண்டும் மயக்க ஊசி செலுத்தி பிடித்து, வால்பாறை அருகே மானாம்பள்ளி வனப்பகுதியில் விட்டனர். ஆனால் அடுத்த ஒரு வாரத்திற்கு பிறகு அங்கிருந்து டாப்சிலிப் வழியாக சேத்துமடை வனப்பகுதிக்கு அந்த யானை வந்தது. மேலும் யானையின் கழுத்தில் பொருத்தப்பட்டு இருந்த ரேடியோ காலர் பழுதானதால், அதன் நடமாட்டத்தை வனத்துறையினரால் கண்காணிக்க முடியாமல் போனது.
இதற்கிடையில் சரளப்பதி ஊருக்குள் புகுந்த அந்த யானை விவசாய பயிர்களை சேதப்படுத்தி அட்டகாசம் ெசய்து வந்தது. அதை பிடிக்கக்கோரி பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். அதற்கு தலைமை வன உயிரின காப்பாளரின் அனுமதி கிடைத்தது. இதைத் தொடர்ந்து அந்த யானையின் நடமாட்டத்தை கால்நடை டாக்டர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை 5 மணிக்கு மீண்டும் வனத்தை விட்டு விளைநிலங்களுக்குள் அந்த யானை புகுந்தது. பின்னர் 5.15 மணிக்கு கால்நடை டாக்டர்கள் துப்பாக்கி மூலம் யானைக்கு மயக்க ஊசி செலுத்தினர். ெதாடர்ந்து அதன் கண்களில் கருப்பு துணி போட்டு மூடி, கால்களை கயிறு மூலம் வனத்துறையினர் கட்டினர்.
இதற்கிடையில் திடீரென யானை முரண்டு பிடித்தது. இதனால் மீண்டும் மயக்க ஊசி செலுத்தப்பட்டது. பின்னர் கும்கி யானை கபில்தேவ் உதவியுடன் மக்னா யானை லாரியில் ஏற்பட்டது. தொடர்ந்து வால்பாறை அருகே உள்ள சின்னக்கல்லார் வனப்பகுதிக்கு அந்த யானையை வனத்துறையினர் கொண்டு சென்றனர். இதனால் பொள்ளாச்சி பகுதிைய விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அந்த யானையின் உடல் நிலை நன்றாக உள்ளதாகவும், அதன் சாணம், ரத்த மாதிரிகள் ஆய்விற்காக எடுக்கப்பட்டு உள்ளதாகவும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து ஆமைனலை புலிகள் காப்பக துணை இயக்குனர் பார்கவ் தேஜா கூறும்போது, அந்த யானைக்கு தற்போது பொருத்தப்பட்டு உள்ள ரேடியோ காலரை அகற்றி விட்டு, புதிய ரேடியோ காலர் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அந்த பகுதி பொதுமக்கள் கூறும்ேபாது, இதுவரை அந்த யானைக்கு 4 முறை மயக்க ஊசி செலுத்தப்பட்டு உள்ளது. வனப்பகுதியில் விட்டாலும், மீண்டும் ஊருக்குள் வர வாய்ப்பு உள்ளது. தொடர்ந்து மயக்க ஊசி செலுத்தினால், அதன் உடல்நலமும் பாதிக்கப்படும். எனவே அந்த யானையை கும்கியாக மாற்ற வேண்டும் என்றனர்.
இதையடுத்து அந்த யானை மதியம் 2.30 மணியளவில் சின்னக்கல்லார் வனப்பகுதியில் விடப்பட்டது. அது அக்காமலை புல்வெளி பகுதியின் அடிவாரத்தில் உள்ள வனப்பகுதிக்கு செல்லும் வகையில், அந்த வழித்தடத்தில் பலாப்பழம், உப்பு கட்டி வீசப்பட்டது. ஆனால் அந்த யானை அங்கு செல்லாமல் குடியிருப்பு பகுதியை ஒட்டிய எஸ்டேட் பகுதியிவேயே முகாமிட்டு வருகிறது. அதை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். ஆனால் அந்த பகுதியை சேர்ந்த தோட்ட தொழிலாளர்கள் பீதி அடைந்து உள்ளனர். மேலும் வனத்துறையினரின் செயலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu