விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு ; பொதுமக்கள் சாலை மறியல்
ஆட்டோடிரைவர் இறப்பிற்காக நடவடிக்கை கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் செய்தனர்.
Accident Public Road Blockage
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே சடைய கவுண்டனூர் என்ற கிராமம் உள்ளது. இந்த பகுதியை சேர்ந்த மணிகண்ட பூபதி (40) என்பவர் ஆட்டோ ஓட்டுநராக பணி புரிந்து வந்தார். இந்த நிலையில் மணிகண்ட பூபதி இன்று வழக்கம் போல ஆட்டோ ஓட்டும் தனது பணிக்கு வந்துள்ளார். அப்போது இன்று அதிகாலை நேரத்தில் பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்று பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில் இறக்கி விட்டுள்ளார். பின்னர் திரும்பி பொள்ளாச்சி திருப்பூர் சாலை கரப்பாடி பிரிவு அருகே செல்லும் பொழுது சாலை பழுது பார்ப்பதற்காக நெடுஞ்சாலைத் துறையினர் ஜல்லிக் கற்களை கொட்டி வைத்துள்ளனர்.
அவ்வழியாக சென்ற போது மணிகண்ட பூபதி ஓட்டிச் சென்ற ஆட்டோ ஜல்லிக்கற்கள் மீது ஏறி தலைகீழாக கவிழ்ந்து விபத்துள்ளானது. இதில் படுகாயமடைந்த மணிகண்ட பூபதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்விற்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே ஆட்டோ ஓட்டுநர்கள், உறவினர்கள் நெடுஞ்சாலைத் துறையினர் அலட்சியம் காரணமாகவே விபத்து ஏற்பட்டு மணிகண்ட பூபதி உயிரிழந்ததாகவும், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பொள்ளாச்சி துணை கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் பொது மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதன் பேரில் பொதுமக்கள் சாலை மறியலைக் கைவிட்டனர். திடீரென ஆட்டோ ஓட்டுநர்கள், உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu