ஆனைமலை ஆற்றில் கலக்கும் கழிவு நீருடன் மனு கொடுக்க வந்த சமூக ஆர்வலர்
மனு கொடுக்க வந்த சமூக ஆர்வலர் காந்தி பூபதி.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆழியார் அணையில் இருந்து கேரள மாநிலத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீர் ஒப்பந்தப்படி, வருடந்தோறும் திறந்து விடப்படுகிறது. இந்த தண்ணீர் ஆனைமலை அம்பராம்பாளையம் பகுதி வழியே கேரள மாநிலத்திற்கு சென்றடைகிறது. பல ஆயிரக்கணக்கான விவசாய நிலங்கள் பாசனத்திற்கும், பொள்ளாச்சி, கிணத்துக்கடவு பகுதி பொதுமக்களின் குடிநீர் தேவைகளையும் பூர்த்தி செய்யவும் இந்த நீர் பயன்படுகிறது. இதனிடையே ஆனைமலை ஆற்றில் கழிவுநீர் நேரடியாக கலந்து மாசடைகிறது. இதனால் ஆனைமலை ஆறு முழுவதும் ஆகாயத்தாமரை பரவி தண்ணீர் மாசடைந்து வருகிறது.
இதற்கு தீர்வு ஏற்படுத்தக் கோரி வேட்டைக்காரன் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் காந்தி பூபதி என்பவர் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்திற்கு மாசடைந்த தண்ணீரை பாட்டிலில் பிடித்து இலை தலை செடிகளை உடல் முழுவதும் கட்டிக்கொண்டு வந்து மனு அளித்தார். அந்த மனுவைப் பெற்றுக் கொண்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்
.இது தொடர்பாக சமூக ஆர்வலர் காந்தி பூபதி கூறும்போது, ஆழியார் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் ஆனைமலை, அம்பராம்பாளையம் சுற்றுப்புற பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. மேலும் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள், ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகரப்பகுதிகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருகிறது. இந்நிலையில் ஆனைமலை பேரூராட்சி உட்பட்ட பகுதிகளில் வீடுகள் அலுவலகங்கள் உணவகங்கள் பல்வேறு ஆலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் நேரடியாக ஆற்றில் கலந்து விடப்படுகிறது. பொதுமக்களின் நலன் கருதி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu