நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வாகனம் மோதி இளைஞர் உயிரிழப்பு
நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வாகனம் மோதியதில் தீப்பற்றி எரிந்த இருசக்கர வாகனம்.
நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தர வடிவேலின் வாகனம் கோவை செல்வதற்காக ஊட்டியில் இருந்து புறப்பட்டது. இந்த வாகனத்தில் அவரது மனைவி வந்ததாக தெரிகிறது. காவல் கண்காணிப்பாளர் சுந்தர வடிவேல் இந்த வாகனத்தில் வரவில்லை. இந்த நிலையில் இன்று மாலை மேட்டுப்பாளையம் - ஊட்டி சாலையில் உள்ள கல்லார் தூரிப் பாலம் அருகே காவல் கண்காணிப்பாளர் வாகனம் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென எதிர்பாராத விதமாக எதிரே வந்த இரு சக்கர வாகனத்தின் மீது காவல் கண்காணிப்பாளரின் வாகனம் மோதி விபத்துள்ளானது. இதில் இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்களும் தூக்கி வீசப்பட்டனர். இதன் காரணமாக இரண்டு இளைஞர்களும் படுகாயம் அடைந்தனர்.
காவல் கண்காணிப்பாளர் வாகனத்தின் மீது இரண்டு சக்கர வாகனம் மோதி விபத்துள்ளானதில், இரு சக்கர வாகனம் தீப்பிடித்து எரிந்தது. இது குறித்து மேட்டுப்பாளையம் காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலின் பேரில் காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இரண்டு சக்கர வாகனத்தில் எரிந்து கொண்டிருந்த தீ காருக்கு பரவாமல் இருக்கும் வகையில் தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் அரை மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர். இதில் இரு சக்கர வாகனம் முழுவதும் எரிந்து நாசமானது.
காவல் கண்காணிப்பாளரின் வாகனத்தில் முன்பக்கம் சேதமடைந்தது. விபத்தில் காயமடைந்த இரண்டு வாலிபர்களையும் அக்கம்பக்கம் இருந்தவர்கள் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பின்னர் இருவரும் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் குறித்து மேட்டுப்பாளையம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் படுகாயமடைந்த இளைஞர்கள் உதகையை சேர்ந்த அல்தாப் (18) மற்றும் ஜூனைத் (18) என்பதும், காவல் கண்காணிப்பாளரின் வாகனத்தை காவலர் ஒருவர் ஒட்டி வந்ததும் தெரியவந்தது. இதனிடையே படுகாயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட அல்தாப் என்ற இளைஞர் உயிரிழந்தார். படுகாயமடைந்த ஜூனைத்திற்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu