மேட்டுப்பாளையம் குடிநீர் குழாயில் இறைச்சி கழிவுகள் கலந்து வருவதாக பொதுமக்கள் புகார்..!

மேட்டுப்பாளையம்  குடிநீர் குழாயில் இறைச்சி கழிவுகள் கலந்து வருவதாக பொதுமக்கள் புகார்..!
X

குடிநீர் குழாயில் வந்த இறைச்சி கழிவுகள்

குடிநீரில் சிறு சிறு துகள்களாக முடி, கொழுப்பு, சிறிய எலும்பு துண்டுகள் கலந்து வந்ததாக பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு உட்பட்ட 21 வது வார்டில் 1500 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இதில் கெண்டையூர் சாமப்பா லே அவுட்டில் 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த குடியிருப்புக்களுக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் நகராட்சி சார்பில் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த பகுதியில் உள்ள ஒரு சில வீடுகளுக்கு மிகவும் துர்நாற்றத்துடன் குடிநீர் வந்ததாக கூறப்படுகிறது. மேலும் குடிநீரில் சிறு சிறு துகள்களாக முடி, கொழுப்பு, சிறிய எலும்பு துண்டுகள் கலந்து வந்ததாக பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.

இதனைக் கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த குடிநீரைக் குடித்த ஒரு சிலருக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டதாக தெரிகிறது. இது குறித்து நகராட்சி நிர்வாகத்திற்கு இப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். தகவலையடுத்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் மற்றும் நகராட்சி குடிநீர் வழங்கும் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று குடிநீர் குழாயை உடைத்து ஆய்வு செய்தனர்.

அப்போது குடிநீர் வரும் இணைப்பு குழாய் அருகே இறைச்சி கழிவுகள் காணப்பட்டது. இந்த இறைச்சி கழிவுகள் குடிநீர் குழாய்க்குள் எப்படி வந்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். நகராட்சி பணியாளர்கள் குடிநீர் குழாய்களை சுத்தம் செய்து மீண்டும் இணைப்பு கொடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த சம்பவம் காரணமாக அந்த வார்டில் உள்ள பொது மக்கள் குடிநீரை குடிக்க அச்சமடைந்துள்ளனர்.

Tags

Next Story