போலீசாரிடம் இருந்து தப்ப முயன்ற ரவுடிகளுக்கு கால் முறிவு: மருத்துவமனையில் சிகிச்சை

போலீசாரிடம் இருந்து தப்ப முயன்ற ரவுடிகளுக்கு கால் முறிவு: மருத்துவமனையில் சிகிச்சை
X

கால் உடைந்த நிலையில் கைது செய்யப்பட்டவர்

போலீசாரிடமிருந்து தப்ப முயன்று இரண்டு ரவுடிகளின் கால்கள் உடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் கோவில்பாளையம் அருகே உள்ள எஸ்.என்.எஸ் கல்லூரியில் படித்து வரும் மாணவர்கள் வெற்றிவேல், பிரவீன் ஆகிய இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் பிரவீனுக்கு ஆதரவாக அந்த கல்லூரியின் முன்னாள் மாணவரான தீபக் என்பவர் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரவீந்திரா என்பவரையும் அவரது கூட்டாளிகளையும் அழைத்து வந்து வெற்றிவேல் தங்கி இருந்த அறைக்குள் நுழைந்து, அங்கிருந்த இருசக்கர வாகனம் உட்பட பொருட்களை தூக்கிச் சென்றனர்.

இது தொடர்பாக கோவில் பாளையம் காவல் நிலையத்தில் கடந்த ஜூன் மாதம் 24 ம் தேதி வெற்றிவேல் அளித்த புகாரில் 9 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அதில் பிரதீப் , தீபக், ஜெர்மன் ராகேஷ், சந்தோஷ், ராகுல் மற்றும் 16 வயது சிறுவன் ஆகிய 6 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய ரவுடி ரவீந்தரா, நந்தகுமார் மற்றும் சிராஜுதீன் ஆகிய மூன்று பேர் தலைமறைவானார்கள்.

தலைமுறைவான மூன்று பேரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு கோவில்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில் ரவுடிகள் மூன்று பேரும் இமாச்சல பிரதேச மாநிலம் , சிம்லாவில் தலைமறைவாக இருப்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து தனிப்படை போலீசார் சிம்லா விரைந்து சென்று கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி மூன்று பேரையும் கைது செய்தனர். அவர்களை சிம்லா நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய பின் கோவை அழைத்து வந்தனர். கோவையில் அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்ட பொழுது கொள்ளை அடிக்க பயன்படுத்திய பொருட்கள், கோவில்பாளையம் பகுதியில் உள்ள ஏரோ சிட்டி என்ற பகுதியில் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து அவர்களை ரவுடிகள் ரவீந்திரா மற்றும் நந்தகுமார் ஆகிய இருவரை மட்டும் அந்தப் பகுதிக்கு போலீசார் அழைத்துச் சென்றனர். அப்பொழுது அவர்கள் இருவரும் போலீசாரிடமிருந்து தப்ப முயன்றனர். அருகில் இருந்த பள்ளத்தில் இருவரும் குதித்த நிலையில் இருவருக்கும் கால் எலும்பு முறிந்தது. இதனையடுத்து அவர்களை தனியார் மருத்துவமனையில் அனுமதித்த போலீசார் அவர்களுக்கு சிகிச்சை அளித்ததுடன், நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.

சிராஜூதீன் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், கால் உடைந்த நிலையில் ரவுடிகள் நந்தகுமார் மற்றும் ரவீந்திரா ஆகிய இருவரும் கோவை அரசு மருத்துவமனையில் உள்ள சிறை கைதிகளுக்கான வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போலீசாரிடமிருந்து தப்ப முயன்று இரண்டு ரவுடிகளின் கால்கள் உடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு