மேட்டுப்பாளையம் நகராட்சி குப்பை கிடங்கில் தீ
குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட தீயை அணைக்கும் தீயணைப்புப்படை வீரர்கள்
மேட்டுப்பாளையம் நகராட்சி குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீயினால் புகை மூட்டத்தை கட்டுப்படுத்த கோரி அ.தி.மு.க வார்டு உறுப்பினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு போராட்டத்தில் இறங்கியதால் பதட்டம் நிலவியது.
மேட்டுப்பாளையம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இங்கு வெளியூர், உள்ளூர் பேருந்து நிலையம், வங்கிகள், குடியிருப்புகள், உருளைக்கிழங்கு மண்டிகள், பழைய இரும்பு குடோன்கள். காய்கறி சந்தைகள் உள்ளிட்டவைகள் உள்ளன. இதனால் மேட்டுப்பாளையம் நகராட்சியில் தினசரி குப்பைகள் குறைந்தது 10 டன்னிற்கு அதிகமாக குவிந்து வருகின்றன.
இந்த குப்பைகள் தூய்மை பணியாளர்கள் மூலம் சேகரிக்கப்பட்டு சிக்கதாசம்பாளையம் ஊராட்சியில் நேஷனல் பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் கொட்டப்பட்டு வருகிறது. இங்கிருந்து குப்பை கழிவுகள் தரம் பிரித்து அதனை உரமாக தயாரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக மேட்டுப்பாளையத்தில் வெயிலின் தாக்கம் அதிகளவில் இருப்பதால் குப்பை மேடுகளில் திடீரென தீப்பற்றி எரிந்து புகை மூட்டமாக இருந்தது. இதுதொடர்பாக சுற்று வட்டார கிராம மக்கள் நகராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தும் அதனை அணைக்கும் பணியில் நகராட்சி அதிகாரிகள் ஈடுபடவில்லை என கூறப்பட்டது.
இதனிடையே மேட்டுப்பாளையம் நகராட்சிக்குட்பட்ட அ.தி.மு.க வார்டு உறுப்பினர்கள் 9 பேர் நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கிற்கு சென்று அதனை அணைக்க வேண்டும் என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு நகராட்சி ஆணையாளர் வினோத், சுகாதார ஆய்வாளர் பாஸ்கரன் தலைமையிலான அதிகாரிகள் நேரில் வந்து குப்பை மேட்டில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து மேட்டுப்பாளையம் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இரண்டு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் சுற்று வட்டார கிராம மக்கள் நிம்மதி அடைந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ.செல்வராஜ் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இதுபோல் தொடர்ந்து நகராட்சி அதிகாரிகள் அலட்சியமாக நடந்து கொள்ளாமல் இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu