அன்னூரில் மக்களுடன் முதல்வர் முகாமை நடத்த எதிர்ப்பு: விவசாயிகள் போராட்டம்
போராட்டம் நடத்திய விவசாயிகளுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
கோவை மாவட்டம் அன்னூர் தாலுகாவில் உள்ள அக்கரை செங்கபள்ளி, குப்பனூர், வடக்கலூர் உள்ளிட்ட ஊராட்சிகளில் சுமார் மூவாயிரம் ஏக்கர் நிலங்களின் பத்திரப்பதிவு பணிகள் திடீரென நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், நில உரிமையாளர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். தமிழ்நாடு அரசு, இந்த பகுதியில் சிப்காட் தொழில் பேட்டை அமைக்க முயற்சித்த நிலையில், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, தற்காலிகமாக சிப்காட் திட்ட பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டன. இருப்பினும், சிப்காட் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த பகுதிகளில் மட்டும் நில பத்திரப்பதிவு பணிகள் முடக்கப்பட்டுள்ளது. இதனால், நிலங்களை விற்று அவசர தேவைகளுக்குப் பயன்படுத்திக் கொள்ள விரும்பும் நில உரிமையாளர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
இந்த பிரச்சனையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில், பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் 200க்கும் மேற்பட்டோர் திரண்டு லக்கேபாளையம் கிராமத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றுவரும் மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சியில் தங்களது குறைகளை முன் வைக்க முயற்சித்தனர். அப்போது இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. தங்கள் பிரச்சனைக்கு முடிவு ஏற்படாமல் மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சியை நடத்த விட மாட்டோம் என தெரிவித்த விவசாயிகள், திருமண மண்டபத்தின் வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நில பத்திரப்பதிவு பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள விவசாயிகள் மேலும், சிப்காட் திட்டம் குறித்த தெளிவான தகவல்களை அரசு வெளியிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். முகாமில் எந்தவிதமான அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் இருக்க, போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் மேலும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் அதனை தடுக்க வஜ்ரா வாகனம் உள்ளிட்ட வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் போலீசார் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu