நகராட்சி கூட்டத்தில் டம்ளர் வீச்சு ; அ.தி.மு.க கவுன்சிலர்கள் மீது வழக்கு..!
அதிமுக கவுன்சிலர்கள் போராட்டம்
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சியின் சாதாரண கூட்டம் நகர்மன்ற தலைவர் மெஹரீபா பர்வீன் அஷ்ரப் அலி தலைமையில் கமிஷனர் அமுதா, துணைத் தலைவர் அருள்வடிவு முனுசாமி முன்னிலையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் மொத்தமாக 32 தீர்மானங்கள் மன்றத்தின் பார்வைக்காக முன் வைக்கப்பட்டன.
அப்போது, மக்கள் பிரச்சினை குறித்து பேசுகையில் அ.தி.மு.க, தி.மு.க கவுன்சிலர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது,7 வது வார்டு அ.தி.மு.க கவுன்சிலர் முகமது இப்ராஹீம்@சலீம் அங்கு தண்ணீர் குடிப்பதற்காக வைத்து இருந்த சில்வர் டம்ளரை தூக்கி தரையில் வீச அது தெறித்து நகர் மன்ற தலைவர் மற்றும் கமிஷனர் அருகில் விழுந்தது. நல்வாய்ப்பாக காயம் ஏதும் ஏற்படவில்லை. இதனை அடுத்து அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து அ.தி.மு.க, தி.மு.க கவுன்சிலர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறும் சூழல் ஏற்பட்டது. அப்போது,18 வது வார்டு அ.தி.மு.க கவுன்சிலர் சுனில்குமார் ஆவேசமாக மன்றத்தின் முன் பார்வைக்காக வைக்கப்பட்ட தீர்மான காப்பியின் நகலை கிழித்து மேலே தூக்கி வீசினார். இதனை அடுத்து கூட்ட அரங்கில் நுழைந்த போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து நகராட்சியில் கவுன்சில் முன் வைக்கப்பட்ட 32 தீர்மானங்களும் " ஆல் பாஸ் " என நகர மன்ற தலைவர் கூறி விட்டு தனது அறைக்கு சென்று விட்டார். தொடர்ந்து பேசிய நகராட்சி தலைவர் மெஹரீபா பர்வீன் அஷ்ரப் அலி தொடர்ந்து அ.தி.மு.க கவுன்சிலர்கள் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அ.தி.மு.க வினரின் இப்போக்கை கண்டிக்கும் வகையில் இனி வரும் இரு கூட்ட தொடர்களில் பங்கேற்க 9 அ.தி.மு.க கவுன்சிலருக்கு தடை விதித்து அதிரடியாக உத்தரவு பிறப்பித்தார்.இந்நிலையில் அ.தி.மு.க கவுன்சிலர்கள் நகர்மன்ற கூட்ட அரங்கிலேயே உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை அடுத்து மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகத்தில் காவல் ஆய்வாளர் மணிகண்டன் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர்.இதனை தொடர்ந்து நகராட்சி தலைவர் மெஹரீபா பர்வீன் அஷ்ரப் அலி, நகராட்சி கமிஷனர் அமுதா, காவல் ஆய்வாளர் மணிகண்டன், எஸ்.ஐ க்கள் குருசந்திர வடிவேல், ஆனந்தகுமார் உள்ளிட்டோர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த அ.தி.மு.க கவுன்சிலர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இதனை அடுத்து நேற்றிரவு அ.தி.மு.க கவுன்சிலர்கள் நகர மன்ற கூட்ட அரங்கை விட்டு வெளியேறி நகராட்சி அலுவலக வாயில் வந்தனர். அப்போது, தி.மு.க, அ.தி.மு.க கவுன்சிலர்கள் மற்றும் அக்கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் மாறி, மாறி கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து ஒருவரையொருவர் தாக்க முற்பட்டதால் அங்கு அசாதாரணமான சூழ்நிலை ஏற்பட்டது. இதனை அடுத்து போலீசார் இவ்விஷயத்தில் தலையிட்டு இரு தரப்பையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் நகராட்சி கமிஷனர் அமுதா நேற்று போலீசில் கொடுத்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் காவல் ஆய்வாளர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் அ.தி.மு.க கவுன்சிலர்கள் முகமது இப்ராஹீம்@சலீம், முகமது மீரான், சுனில் குமார், ராஜேஷ், மருதாச்சலம், தனசேகர், குருபிரசாத், கலைச்செல்வி, விஜயலட்சுமி உள்ளிட்ட 9 பேர் மீது அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், மிரட்டுதல், பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu