காட்டு யானைக்கு ரேடியோ காலர் பொருத்த ஏற்பாடுகள் தீவிரம்
பாகுபலி யானை
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் மற்ற யானை கூட்டத்தோடு சேராமலும், அடர்ந்த வனத்தினுள் செல்லாமலும் குடியிருப்பு பகுதிகளில் சுற்றித்திரியும் ஆண் யானைக்கு ரேடியோ காலர் பொருத்தி கண்காணிக்க வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக சுமார் முப்பது வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானையை வனத்துறையினர் காட்டை நோக்கி விரட்டினாலும் மீண்டும் மீண்டும் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளுக்கே திரும்பி வந்தபடி உள்ளது.
இதுவரை மனிதர்கள் யாரையும் இந்த யானை தாக்க முற்பட்டதில்லை. அதன் பெரிய உருவம் காரணமாக பாகுபலி என்றும் பெயரிட்டு இந்த யானையை அழைக்க துவங்கியுள்ள இப்பகுதி மக்கள் இதனை அடர்ந்த காட்டினுள் விரட்ட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பாகுபலி யானையின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணிக்கும் வகையில் அதன் கழுத்து பகுதியில் ரேடியோ காலர் பொருத்த தமிழக தலைமை வன உயிரின காப்பாளர் கடந்த வாரம் உத்தரவிட்டார்.
இதனையடுத்து வனத்துறையினர் நான்கு குழுக்களாக பிரிந்து பாகுபலியை கண்காணிக்கும் பணியினை மேற்கொண்டனர். ரேடியோ காலர் பொருத்த முதலில் காட்டு யானையை கும்கி யானைகளின் உதவியோடு சுற்றி வளைத்து அதனை சமவெளி பகுதிக்கு கொண்டு வந்த பின்னர் மயக்க ஊசி செலுத்த வேண்டும் என்பதால் அதற்கான முதற்கட்ட பணிகள் நடைபெற்று வந்தன.
இதன்படி டாப்ஸ்லிப் பகுதியில் உள்ள வரகளியாறு வனத்துறை முகாமில் இருந்து அழைத்து வரப்பட்ட கலீம் என்ற கும்கி யானை மேட்டுப்பாளையம் வந்தடைந்தது.
வனத்துறை லாரி மூலம் கொண்டு வரப்பட்ட கும்கி யானை கலீம் மேட்டுப்பாளையம்-கோத்தகிரி சாலையில் உள்ள வனத்துறைக்கு சொந்தமான அரசு மரக்கிடங்கின் பின்புறமுள்ள பகுதியில் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.
மேலும் இரு கும்கி யானைகள் அடுத்தடுத்த நாட்களில் வந்தடைந்த பின்னர் மூன்று கும்கிகளின் உதவியோடு காட்டு யானையான பாகுபலியை சுற்றி வளைக்க வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu