மேட்டுப்பாளையம் நகராட்சி ஆணையாளரை மிரட்டிய அதிமுக எம்எல்ஏ ; வழக்குப்பதிவு செய்த போலீஸ்
Coimbatore News - நகராட்சி ஆணையாளருக்கு ஆறுதல் சொன்ன மக்கள் பிரதிநிதிகள்.
Coimbatore News, Coimbatore News Today- கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. நகராட்சி தலைவராக மெஹரீபா பர்வீன் அஷ்ரப் அலி என்பவரும், துணைத்தலைவராக அருள் வடிவு என்பவரும் பதவி வகித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று நகராட்சி அலுவலகத்திற்கு வந்த தனது ஆதரவாளர்களுடன் வந்த மேட்டுப்பாளையம் அதிமுக எம்எல்ஏ ஏ.கே.செல்வராஜ் நகராட்சி ஆணையாளர் அமுதாவின் அறைக்குச் சென்று அவரிடம் வளர்ச்சிப் பணிகள் குறித்து கேள்வி கேட்டுள்ளார்.அப்போது, அவர் கமிஷனரை ஒருமையில் பேசி மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதனிடையே கமிஷனர் எம்எல்ஏ மிரட்டியதால் பயந்து அழுது கொண்டு இருந்துள்ளார். இந்த நிலையில் வரும் குடியரசு தினத்தை முன்னிட்டு விழாவினை கொண்டாடுவது குறித்து பேசுவதற்காக நகராட்சி தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்டோர் கமிஷனர் அறைக்கு சென்றுள்ளனர். அப்போது,எம்எல்ஏ மிரட்டியதால் இருக்கையில் இருந்து எழுந்து அழுது கொண்டிருந்த கமிஷனரை சமாதானப்படுத்தி நகராட்சி தலைவரும், துணைத் தலைவரும் மீண்டும் இருக்கையில் அமர வைத்தனர். பின்னர் கமிஷனர் அங்கிருந்து வேறு ஒரு அறைக்கு சென்று விட்டு நீண்ட நேரம் கழித்தே மீண்டும் வந்தார்.
அப்போது, எம்எல்ஏ ஏகே செல்வராஜ், ”நான் பேசிக்கொண்டிருக்கும்போது நீ எதற்கு உள்ளே வந்தாய்?” என ஒருமையில் நகராட்சி தலைவர் மற்றும் துணைத்தலைவரையும் பேசியுள்ளார். இதனைக்கண்ட திமுக கவுன்சிலர்கள் அங்கு சென்று அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இச்சம்பவம் குறித்து அறிந்த மேட்டுப்பாளையம் உதவி ஆய்வாளர் செல்வநாயகம் தலைமையிலான காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட அதிமுக மற்றும் திமுகவினரை சமாதானப்படுத்த முயன்றனர். அப்போது, திமுகவினர் எம்எல்ஏ மற்றும் அவரது ஆதரவாளர்களுடன் எப்படி நகராட்சி தலைவர், துணைத்தலைவர் மற்றும் கமிஷனரை ஒருமையில் பேசலாம்? கமிஷனரை எவ்வாறு மிரட்டலாம்? என கேள்வி கேட்க அப்போதும் அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவாதம் முற்றி ஒரு கட்டத்தில் கைகலப்பு ஏற்படும் சூழல் ஏற்பட்டது.மேலும், அதிமுக,திமுகவினரிடையே வாக்குவாதம் ஏற்பட்ட தகவல் அறிந்து வந்த இரு தரப்பினரும் நகராட்சி அலுவலக வளாகத்தில் குவிந்ததால் பதட்டமான சூழல் ஏற்பட்டது. இதனையடுத்து இச்சம்பவம் குறித்து மேட்டுப்பாளையம் டிஎஸ்பி பாலாஜிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர் விரைந்து வந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பான பேச்சுவார்த்தைக்கு பின்னர் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
பின்னர் எம்எல்ஏ ஏ.கே.செல்வராஜ் கமிஷனர் அமுதா, நகராட்சி பொறியாளர் சுகந்தி உள்ளிட்டோரிடம் வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து பேசி விட்டு அங்கிருந்து கிளம்பினார். இதனிடையே மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் கமிஷனரை ஒருமையில் பேசி மிரட்டியதாக நகராட்சி ஊழியர்கள் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகத்தில் ஆணையாளரிடம் பணிசெய்ய விடாமல், ரகளை செய்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர் உட்பட அதிமுக கவுன்சிலர்கள் நிர்வாகிகள் மீது நான்கு பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu