பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர் போக்சோவில் கைது
நடராஜன்
கோவை மேட்டுப்பாளையம் அடுத்த சிறுமுகை அருகே உள்ள ஆலாங்கொம்பு அரசு பள்ளியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு பணியாளர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பாலியல் வன்கொடுமை, குழந்தை திருமணம், குழந்தைகள் உதவி மையம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தி உள்ளனர். அப்போது அந்தப் பள்ளியில் 7, 8, 9 ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவிகள் 9 பேர் அவர்களிடம் பள்ளியில் 7 வது மற்றும் 8 வது வகுப்புகளுக்கு பாடம் எடுக்கும் இடைநிலை ஆசிரியர் நடராஜன் (54) என்பவர், மாணவிகளுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாக புகார் தெரிவித்து உள்ளனர்.
மேலும் இது குறித்து வகுப்பு ஆசிரியரான கீதா மற்றும் ஷியாமளா உள்ளிட்டோரிடம் அப்போதே தெரிவித்ததாகவும், அதனை அறிந்தும் பள்ளியின் தலைமை ஆசிரியை ஜமுனா, பட்டதாரி ஆசிரியை சண்முகவடிவு உள்ளிட்டோர் அதனை மூடி மறைக்கும் வகையில் கண்டுகொள்ளாமல் இருந்ததாகவும் தெரிவித்து உள்ளனர்.
இதையடுத்து கடந்த இரண்டு மாதங்களாக மாணவிகளுக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக காவல் நிலையத்திலும், குழந்தைகள் நல அதிகாரிகளிடமும் அவர்கள் புகார் அளிக்காமல் இருந்து வந்ததாகவும், ஆசிரியர் நடராஜன் உள்ளிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஹப்ஷா மேட்டுப்பாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதனை அடுத்து பள்ளி மாணவிகள் 9 பேரை பாலியல் தொந்தரவு செய்த ஆசிரியர் நடராஜன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் அவரை கைது செய்யப்பட்டார். மேலும் இந்த சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜமுனா, ஆசிரியைகள் கீதா, ஷியாமளா, சண்முகவடிவு ஆகியோர் மீதும் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu