பாதாள சாக்கடை குழாயில் உடைப்பு ; சாலையோரம் ஆறாக ஓடிய கழிவு நீர்
Coimbatore News- பாதாள சாக்கடை குழாயில் உடைப்பு
Coimbatore News, Coimbatore News Today- கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகர பகுதிகளில் மேட்டுப்பாளையம் நகராட்சி சார்பில் ரூபாய் 99 கோடி செலவில் பாதாள சாக்கடை அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு உட்பட்ட 33 வார்டு பகுதிகளில் இருந்து பாதாள சாக்கடைகள் மூலம் வெளியேற்றப்படும் கழிவு நீர், குழாய்கள் மூலம் சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது.
இந்த நிலையில் மேட்டுப்பாளையம் பகுதியில் இருந்து சிறுமுகை செல்லும் சாலையில் உள்ள சங்கர் நகர் என்னும் பகுதியில் கழிவு நீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் அந்த குழாயில் இருந்து கழிவு நீர் வெளியேறி சாலை முழுவதும் ஓடியது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசியதோடு, சுகாதார சீர்கேடு ஏற்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.
சாலையோரம் பதிக்கப்பட்ட கழிவு நீர் குழாய் பகுதியில் டிப்பர் லாரி மோதியதால் உடைப்பு ஏற்பட்டதாக நகராட்சி தரப்பில் கூறப்படுகிறது. கழிவு நீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் அதன் வழியே செல்லும் தண்ணீர் உடனடியாக நிறுத்தப்பட்டு உடைப்பை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். நீரூற்று போல் சாலையோரம் கழிவு பீய்ச்சியடித்தது.
இதனை அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் சிலர் தங்களது செல்போனில் வீடியோ எடுத்து பேஸ்புக், எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவேற்றி உள்ளனர். இக்காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. நகராட்சி நிர்வாகம் உடனடியாக கழிவு நீர் குழாய் உடைப்பை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu