கோவை அருகே பெண் குழந்தையை விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை அருகே பெண் குழந்தையை விற்பனை செய்த 3 பேர் கைது
X

கைது செய்யப்பட்டவர்கள்

கோவை அருகே பெண் குழந்தையை விற்பனை செய்ததாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள சாமிசெட்டிபாளையம் சின்னக்கண்ணான் புதூரை சேர்ந்தவர் ஆதி கணேஷ் (வயது 25). இவர் அந்தப் பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி நந்தினி (22). இவர்களுக்கு 3 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் நந்தினி மீண்டும் கர்ப்பமானார். அவருக்கு கடந்த 14-ந் தேதி மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்து உள்ளது. குடும்ப சூழ்நிலை மற்றும் வறுமை காரணமாக, தங்களுக்கு பிறந்த பெண் குழந்தையை ஆதிகணேஷ்-நந்தினி தம்பதியினர் விற்க முடிவு செய்தனர். இதற்காக அவர்கள் இடைத்தரகர்களை தேடி வந்தனர்.

இந்த நிலையில், இந்த தம்பதியினர் குழந்தையை விற்பனை செய்ய இருப்பதை அறிந்த கஸ்தூரிபாளையம் சத்யா நகரை சேர்ந்த இடைத்தரகர் தேவிகா (42) என்பவர் நந்தினியை அணுகினார். அவர், நந்தினியிடம் கூடலூர் கவுண்டம்பாளையம் மாந்தோப்பை சேர்ந்த மகேஷ்வரன்-அனிதா தம்பதிக்கு குழந்தை இல்லாமல் இருப்பதால், அவர்கள் குழந்தையை தத்தெடுத்து வளர்க்க ஆசைப்படுகிறார்கள் எனவும் கூறியுள்ளார். எனவே குழந்தையை என்னிடம் கொடு, நான் அவர்களிடம் கொடுத்து விடுகிறேன் என்று கூறி உள்ளார். இதையடுத்து நந்தினி, இடைத்தரகர் தேவிகா ஆகியோர் சேர்ந்து அந்த குழந்தையை அனிதாவிடம் ரூ.1 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்து உள்ளனர். அதற்கான கமிஷனையும் நந்தினி மற்றும் அனிதாவிடம் தேவிகா பெற்று உள்ளார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஹெல்ப்லைன் மைய அதிகாரிகள் பெரியநாயக்கன்பாளையம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து குழந்தையை விற்பனை செய்த குழந்தையின் தாய் நந்தினி, இடைத்தரகராக செயல்பட்ட தேவிகா, அந்த குழந்தையை வாங்கிய அனிதா ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். அத்துடன் அந்த பெண் குழந்தையையும் மீட்டனர். தொடர்ந்து இதேபோல தேவிகா யாரிடமாவது குழந்தையை வாங்கி விற்பனை செய்து உள்ளாரா என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு