கோவையில் போலி தங்க கட்டியினை விற்க முயன்ற இருவர் கைது

கோவையில் போலி தங்க கட்டியினை விற்க முயன்ற இருவர் கைது
X

கோவையில் போலி தங்க கட்டி விற்க முயன்றதாக கைது செய்யப்பட்ட இருவர்.

கோவையில் போலி தங்க மூலம் பூசப்பட்ட போலி தங்க கட்டியை விற்க முயன்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சியைச் சேர்ந்த ஆயில் மில் ஒன்றில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருபவர் வேலுமணி. இதே மில்லில் கேரளாவைச் சேர்ந்த இஸ்லாம் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இஸ்லாம் , மேற்பார்வையாளர் வேலுமணியிடம் தங்களிடம் அரை கிலோ எடையிலான தங்க கட்டி ஒன்று இருப்பதாகவும், மிக குறைவான விலைக்கு அந்த தங்க கட்டியை கொடுக்க தனது நண்பர்கள் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து வேலுமணி, தனது நண்பர் பாட்ஷா என்பவருடன் சேர்ந்து, இஸ்லாமின் நண்பர் சம்சத் யாசின் என்பவரிடம் போனில் பேசியுள்ளார். அப்பொழுது சம்சத் யாசின் தங்களிடம் தங்க கட்டி இருப்பதாகவும் அதை ஆறு லட்ச ரூபாய்க்கு கொடுக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து வேலுமணியும், பாட்ஷாவும் பணத்துடன் கோவை தொண்டாமுத்தூர் வந்து சம்சத் யாசின் சொன்ன இடத்தில் காத்திருந்தனர். சம்சத் யாசின் வந்த பொழுது தங்களிடம் ஆறு லட்ச ரூபாய் பணம் இல்லை எனவும் இரண்டு லட்ச ரூபாய் தான் இருக்கிறது எனவும் தெரிவித்துள்ளனர். இரண்டு லட்ச ரூபாய் பணத்தை வாங்கிக் கொண்டு தங்களிடமிருந்த தங்கக் கட்டியை வேலுமணியிடம் கொடுத்த உடனேயே , சம்சத் யாசின், முகமது அலி மற்றும் இஸ்லாம் ஆகிய மூன்று பேரும் ஓட்டம் பிடித்துள்ளனர்.

இதனால் சந்தேகம் அடைந்த வேலுமணியும் , பாட்ஷாவும் விரட்டிச் சென்று முகமது அலி மற்றும் இஸ்லாம் ஆகிய இருவரையும் பிடித்தனர். சம்சத் யாசின் அந்த இடத்திலிருந்து தப்பி ஓடினார். பிடிபட்டவர்களிடம் விசாரித்த பொழுது அது தங்க கட்டி கிடையாது எனவும், காப்பரால் செய்யப்பட்ட, தங்க முலாம் பூசப்பட்ட காப்பர் கட்டி என்பது தெரிய வந்தது. இதனையடுத்து வேலுமணி இது தொடர்பாக தொண்டாமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலி தங்க கட்டி கொடுத்து மோசடி செய்ய முறை என்ற இருவரையும் கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள சம்சத் யாசின் என்பவரை தேடி வருகின்றனர்.

Tags

Next Story