குப்பைக்கிடங்கு பிரச்சனைக்கு தீர்வு காணக்கோரி மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் உண்ணாவிரதம்
மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் உண்ணாவிரதம்
கோவை வெள்ளலூர் பகுதியில் மாநகராட்சி குப்பைக் கிடங்கு அமைந்துள்ளது. கோவை மாநகராட்சி பகுதியில் உள்ள நூறு வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பை மற்றும் கழிவுகள் இந்த குப்பை கிடங்கில் கொட்டப்படுகின்றது .நாளொன்றுக்கு 1200 டன் குப்பைகள் வெள்ளூர் குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது. நீதிமன்ற உத்தரவுப்படி, குப்பைகளை தரம் பிரிக்காமல் அப்படியே மண்ணில் போடுவதாகவும், குப்பை கிடங்கில் இருந்து துர்நாற்றம் வீசுவதால் சுற்றுவட்டார பகுதி மக்கள் பாதிக்கப்பட்டு வருவதாகவும் கூறி, இந்தக் குப்பைக் கிடங்கை இடமாற்றம் செய்யக்கோரி தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன.
இந்த நிலையில் நாளை பொள்ளாச்சி பகுதியில் நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தர உள்ளார். பொள்ளாச்சி செல்லும் முதலமைச்சர் ஸ்டாலின் வெள்ளலூர் குப்பைக் கிடங்கை பார்வையிட வேண்டுமெனவும், குப்பைக் கிடங்கு பிரச்சனைக்கு தீர்வு காண வலியுறுத்தியும் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். இதனைத்தொடர்ந்து அதே கோரிக்கையை வலியுறுத்தி இன்று அவ்வியக்கத்தை சேர்ந்தவர்கள் ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
வெள்ளலூர் குப்பைக் கிடங்கினால் வெள்ளலூர், செட்டிபாளையம், போத்தனூர் ஆகிய பகுதிகளில் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நிலத்தடி நீரும் மஞ்சள் நிறத்திற்கு மாறி பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் அவ்வமைப்பினர் கூறினர். குப்பைக் கிடங்கு பிரச்சனைக்கு தீர்வு காணக்கோரி தொடர் போராட்டங்கள் நடத்தியும் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், முதலமைச்சர் ஸ்டாலின் பார்வையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu