தக்காளி செடியில் நோய் தாக்குதல்: கிணத்துக்கடவு விவசாயிகள் கவலை
தக்காளி செய்தியில் நோய் தாக்குதல்
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆண்டுதோறும் சுமார் 1,600 ஏக்கரில் தக்காளி பயிரிடுவது வழக்கம்.
இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை சரிவர பெய்யாததால், கிணத்துக்கடவு பகுதியில் உள்ள பல்வேறு இடங்களில் தக்காளி பயிரிடுவதை விவசாயிகள் தவிர்த்தனர். ஒருசில பகுதிகளில் அவ்வபோது கிடைத்த சாரல் மழை மற்றும் சொட்டு நீர் பாசனத்தை கொண்டு சுமார் 550 ஏக்கர் மட்டும் தக்காளி சாகுபடி செய்தனர்.
இந்தநிலையில் கிணத்துக்கடவு அருகே தேவரடிபாளையம், வடபுதூர் உள்ளிட்ட கிராமங்களில் விளைச்சலுக்கு வந்துள்ள தக்காளி செடிகளில் வாடல் நோய் தாக்குதல் அதிகமாக உள்ளது. இதனால் விளைச்சல் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இதை தவிர்க்க தக்காளி செடிகளுக்கு பல்வேறு மருந்துகளை தெளித்தாலும் நோயை கட்டுப்படுத்த முடியவில்லை.
ஏற்கனவே உச்சத்தில் இருந்த தக்காளி விலை பாதாளத்துக்கு வந்துவிட்டது. தற்போது நோய் தாக்குதலும் அதிகரித்து வருவதால், என்ன செய்வது என்று தெரியாமல் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: காய்களின் பாதுகாப்புக்காக குச்சிகள் நட்டு கம்பி கட்டுவது வழக்கம். அந்த நேரத்தில் செடியை வாடல் நோய் தாக்கி வருகிறது. எந்த மருந்துகளை பயன்படுத்தினாலும், அந்த நோயை கட்டுப்படுத்த முடியவில்லை. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு வரை கிணத்துக்கடவு பகுதியில் தக்காளி விவசாயம் சிறப்பாக இருந்தது. தற்போது அப்படி இல்லை. நாளுக்குநாள் நோய் தாக்குதல் அதிகரிக்கிறது. இப்போது பரவி வரும் வாடல் நோயை கட்டுப்படுத்த மருந்து இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று கூறுகிறார்கள். எனவே தோட்டக்கலை துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, இந்த நோயை கட்டுப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu