சிங்காநல்லூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை

சிங்காநல்லூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை
X

லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்திய சிங்காநல்லூர் சார் பதிவாளர் அலுவலகம்.

கோவை சிங்காநல்லூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி கணக்கில் வராத ரூ.13 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.

கோவை சித்தாபுதூர் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பசாமி. இவர் பத்திரப்பதிவிற்கு வெள்ளலூரில் அமைந்துள்ள சிங்காநல்லூர் சார்பதிவாளர் அலுவலகம் சென்றுள்ளார். அங்கு சார் பதிவாளராக உள்ள நான்சி நித்யா கரோலின் என்பவர் 35 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இது குறித்து அவர் லஞ்ச ஒழிப்பு துறை காவல் துறைக்கு தகவல் தெரிவித்தார். இதன் அடிப்படையில், ரசாயனம் தடவப்பட்ட ரூபாய் நோட்டுகளை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கருப்பசாமியிடம் கொடுத்து அனுப்பினர்.

லஞ்சப் பணத்தை சிங்காநல்லூர் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு நேரில் சென்று கருப்பசாமி கொடுத்தார். பணத்தை வாங்கிய இளநிலை உதவியாளர் பூபதி ராஜா மற்றும் சார் பதிவாளர் நான்சி நித்யா கரோலின் ஆகிய இருவரையும் அப்போது லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்தனர்.

மேலும் சார் பதிவாளர் நான்சி நித்யா கரோலின் நான்கு சக்கர வாகனத்தை போலீசார் சோதனையிட்ட போது, அதில் கணக்கில் வராத 13 லட்சம் ரூபாய் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அந்த பணத்தையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர். இதனைத் தொடர்ந்து இருவர் மீதும் லஞ்ச ஒழிப்பு காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதே அலுவலகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பும் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story