மதுக்கரை அருகே காட்டு யானை தாக்கி விவசாயி படுகாயம்

மதுக்கரை அருகே காட்டு யானை தாக்கி விவசாயி படுகாயம்
X

யானை தாக்கி விவசாயி படுகாயம்

புரசக்காடு வனத்திற்கு வந்த ஒற்றை ஆண் காட்டு யானை சின்னநீலனை தாக்கியதில் முதுகில் காயம் ஏற்பட்டது.

கோவை வனக்கோட்டம் மதுக்கரை வனச்சரகத்திற்குட்பட்ட மாவுத்தம்பதி கிராமத்தை சார்ந்தவர் சின்னநீலன். விவசாயியான இவர் அப்பகுதியில் மாடுகளை வளர்த்து வருகிறார். நாள் தோறும் மாடுகளை அருகில் உள்ள வனப்பகுதிக்கு மேய்ச்சலுக்கு மாடுகளை அழைத்து செல்வது வழக்கம். இந்நிலையில் இன்று காலை 5.30 மணி அளவில் வழக்கம் போல் மாடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்ல தனது வீட்டில் இருந்து சென்றுள்ளார். அப்போது கேரள வனப்பகுதியில் இருந்து தமிழக வனப்பகுதியான புரசக்காடு வனத்திற்கு வந்த ஒற்றை ஆண் காட்டு யானை சின்னநீலனை தாக்கியதில் முதுகில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவரின் அலறல் சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் அங்கு வந்து ஒற்றை யானையை வனப்பகுதிக்குள் விரட்டி சின்னநீலனை மீட்டு வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

தொடர்ந்து அங்கு வந்த வனத்துறையினர் சின்னநீலனை கோவை அரசு மருத்துவ மனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதுகில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வனத்துறையினர் கூறுகையில் கோடை காலம் என்பதால் கடுமையான வறட்சி நிலவிய நிலையில் கேரளா வனப்பகுதியில் இருந்தும் தமிழக வனப்பகுதியில் இருந்தும் யானைகளின் இடப்பெயர்ச்சி நடைபெற்று வந்தது. தற்போது கோடை மழை பெய்து வருவதால், தமிழக வனப்பகுதியில் உள்ள நீரோடைகளில் தண்ணீர் வரத்து இருப்பதால் கேரளா வனப்பகுதியில் இருந்து யானைகள் அதிக அளவில் இடம்பெயர்ந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து அவ்வாறு வந்த யானை சின்ன நீலனை தாக்கியுள்ளது. அவரை வனத்துறையினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தொடர்ந்து அவரது உடல் நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்து வருகின்றனர். மேலும் யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளதால் வனப்பகுதி ஒட்டி உள்ள கிராம மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வனத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!