வழக்கறிஞர் கொலை வழக்கில் 4 பேர் காவல் நிலையத்தில் சரண்

வழக்கறிஞர் கொலை வழக்கில் 4 பேர் காவல் நிலையத்தில் சரண்
X

உதயகுமார்

கொலைக்கான காரணம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை சரவணம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் உதயகுமார். இவரது மனைவி டாக்டர் நித்யாவள்ளி, கோவில்பாளையம் அருகே உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். வெள்ளிக்கிழமை, பொள்ளாச்சி செல்ல திட்டமிட்டு இருந்த உதயகுமார், தனது காரில் வீட்டை விட்டு புறப்பட்டார். ஆனால், செட்டிபாளையம் அடுத்த மயிலேரிபாளையம் அருகே உள்ள ஒரு கோழிப்பண்ணை அருகே அவரது உடல் கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவரது கழுத்து மற்றும் மார்பில் பல காயங்கள் இருந்தன.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், அடையாளம் தெரியாத நபர்கள் காரில் வந்த உதயகுமாரை தடுத்து நிறுத்தி அவரை காரில் இருந்து இறங்கச் சொல்லி கோழிப் பண்ணை அருகே கொண்டு சென்று கத்திகளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது தெரியவந்து உள்ளது. பின்னர் அவரது காரை எடுத்துக் கொண்டு தப்பிச் சென்று உள்ளனர்.

தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உதயகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் சம்பவ இடத்தை பார்வையிட்டு, கொலையாளிகளை பிடிக்க 6 தனிப்படைகள் அமைத்தார். தனிப்படை போலீசார் கொலையாளிகளை தேடி வந்த நிலையில் கோவை ரத்தினபுரியைச் சேர்ந்த அய்யனார் என்கிற செல்வம், கோவை கணபதி பகுதியைச் சேர்ந்த கௌதம் என்கிற விருமாண்டி, கோவை கணபதி பகுதியைச் சேர்ந்த அருண்குமார், கோவை சங்கனூர் பகுதியைச் சேர்ந்த அபிஷேக் ஆகிய நால்வர் கோவில்பாளையம் காவல் நிலையத்தில் நள்ளிரவில் சரண் அடைந்து உள்ளனர்.

நால்வரையும் போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று மாலைக்குள் நால்வரையும் போலீசார் நீதிபதி முன்பாக ஆஜர்படுத்த உள்ளனர். போலீசாரின் விசாரணையில் வழக்கறிஞர் கொலைக்கான முதல் கட்ட தகவல்கள் இன்று மாலைக்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சரணடைந்தவர்களில் அபிஷேக் மற்றும் அருண்குமார் தவிர மற்ற இருவர் மீதும் காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்