'2026 ஆம் ஆண்டில் நாடு முழுவதும் 100 சதவீதம் ஜல் சக்தி திட்டம் நிறைவேற்றப்படும்’ - மத்திய இணையமைச்சர் பிஸ்வேஸ்வர் துடு
மத்திய இணையமைச்சர் பிஸ்வேஸ்வர் துடு
கோயம்புத்தூர் மாநகரின் காளப்பட்டி பகுதியில் உள்ள எச்.டி.எப்.சி வங்கி முன்பு இன்று நடைபெற்ற 'நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் யாத்திரை' நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மத்திய ஜல்சக்தி மற்றும் பழங்குடியின விவகாரங்கள் துறை இணை அமைச்சர் பிஸ்வேஸ்வர் துடு கலந்து கொண்டார். மாவட்ட முன்னோடி வங்கியான கனரா வங்கி சார்பில் நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியில் சுமார் 69 லட்சம் மதிப்பிலான மத்திய அரசின் கடன் உதவி திட்டங்கள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வளர்ச்சியடைந்த பாரதத்திற்கான உறுதிமொழி ஏற்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் தபால் துறை, இந்தியன் ஆயில் நிறுவனம், சுகாதாரத்துறை மற்றும் சுய உதவி குழுக்கள் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டு பல்வேறு திட்டங்களில் பொதுமக்கள் சேர்க்கப்பட்டனர். இந்நிகழ்வில் சிறப்புரையாற்றிய மத்திய இணை அமைச்சர் பிஸ்வேஸ்வர் துடு பேசுகையில், மக்களுக்கான திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்வதில் மத்திய மாநில அரசுகள் இணைந்து செயலாற்ற வேண்டும் என தெரிவித்தார். மேலும், பிரதமர் மோடி தலைமையிலான அரசு பெண்களுக்கும், விவசாயிகளுக்கும், பழங்குடியினருக்கும் முக்கியத்துவம் அளித்து செயல்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
நமது நாட்டின் ஜனாதிபதியாக பழங்குடியின பெண் ஒருவரை தேர்வு செய்து அனைவரையும் பிரதமர் பெருமை படுத்தி உள்ளதாக அமைச்சர் கூறினார். நாடு முழுவதும் ஜல் சக்தி திட்டம் 73% நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், சில மாநிலங்களில் 50 முதல் 60% வரை ஜல் சக்தி திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும், 2026 ஆம் ஆண்டில் 100 சதவீதம் நாட்டில் ஜல் சக்தி திட்டம் நிறைவேற்ற அரசு செயல்பட்டு வருவதாக மத்திய இணை அமைச்சர் தெரிவித்தார். பல்வேறு மத்திய அரசின் திட்டங்களை பட்டியலிட்ட மத்திய இணை அமைச்சர், பாரத பிரதமரின் வீட்டு வசதி திட்டம் பழங்குடியின மக்களுக்கு பெரும் பயன் அளித்து வருவதாகவும், அரசு பட்டா வழங்கினால் மட்டுமே இத்திட்டத்தை பழங்குடியினர் பெறும் வகையில் உள்ளதால், மாநில அரசு இதற்கு உறுதுணையாக செயல்பட வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.
இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்கும் விதமாக மத்திய அரசு ஸ்கில் இந்தியா திட்டம், ஸ்டார்ட் ஆப் இந்தியா திட்டம் ஆகியவற்றை செயல்படுத்தி வருவதாகவும், விஸ்வகர்மா யோஜனா திட்டத்தின் மூலம் பாரம்பரியமிக்க கைவினை கலைஞர்கள் ஊக்கப்படுத்தப்படுவதோடு, இதன் மூலம் வேலை வாய்ப்புகளும் உருவாக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். நிகழ்ச்சியின் நிறைவாக நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் யாத்திரை விழிப்புணர்வு வாகனத்தை நேரில் பார்வையிட்டு துவக்கி வைத்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu