எந்த தொகுதியில் போட்டி? கோவையில் அண்ணாமலை பரபரப்பு பேட்டி

எந்த தொகுதியில் போட்டி? கோவையில் அண்ணாமலை பரபரப்பு பேட்டி
X

கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அண்ணாமலை.

நாடாளுமன்ற தேர்தலில் எந்த தொகுதியில் போட்டி என்பது பற்றி கோவையில் பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி அளித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர் கூறியதாவது:-

போதைப் பொருளை பொறுத்தவரை இந்தியாவின் எல்லையோர மாநிலங்களில் மிகப்பெரிய பிரச்சனை இருக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரை கோல்டன் க்ரசென்ட் கோல்டன் ட்ரையாங்கிள் என இரண்டு இருப்பதாகவும் ஈரான், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மூன்றையும் கோல்டன் கிரசன்ட் என்பதாகவும், உலகில் அதிகமாக உற்பத்தியாகும் ஓபிஎம் அந்தப் பகுதியில் உள்ள நிலையில் உலகம் முழுவதும் கடத்தப்பட்டாலும் இந்தியாவும் அதில் ஒரு கடத்தல் மையம். அதேபோல் மியான்மார், கம்போடியா ஆகியவையும் வடகிழக்கு பகுதியில் இந்தியாவிற்குள் வருவதால் காலம் காலமாக இந்தியாவில் போதைப் பொருள் கடத்தலை தடுக்க பிரதமர் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

இன்று இந்த கடத்தல்காரர்கள் உள்ளூரில் உருவாகிறார்கள். ஒரு பக்கம் அரசியல்வாதிகள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். மறுபக்கம் தந்தை தாய் கண்காணிப்பை உறுதிப்படுத்த வேண்டும். போதைப் பொருளால் ஒரு தலைமுறை அழிந்துவிடும் என்பதால் குருதேவ் அவரது இயக்கத்தின் சார்பாக அற்புதமான நிகழ்ச்சியை கோவையில் நடத்தி இருக்கிறார். தொடர்ந்து இதே போல் பல சமுதாயப் பெரியவர்கள் நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை.

2013ஆம் ஆண்டு ஜாபர் சாதிக் உட்பட நான்கு பேர் சின்தடிக் போதை பொருள் கடத்தலுக்காக கைது செய்யப்பட்டனர். 20 கிலோவுக்காக கைது செய்யப்பட்ட அவர், 11 ஆண்டுகள் கழித்து இன்று 3500 கிலோவை கையாளுகிறார் என்றால் காவல் துறையினர் முழுமையாக இது போன்றவர்களை கண்காணிக்க வேண்டும். அவர் டிஜிபி இடம் விருது வாங்குகிறார். சினிமா துறையில் கம்பெனி நடத்துகிறார். மிகப்பெரிய மனிதர்களின் நட்பில் இருக்கிறார். திமுக குடும்பத்தின் நட்பாக இருக்கிறார் என்பதால் இவர் நல்லவராக இருக்கிறார் என்று பழக ஆரம்பித்து இருக்கிறார்கள்.

ஆனால் ஜாபர் சாதிக் இன்று வந்திருக்கக்கூடிய நபர் இல்லை. 11 ஆண்டுகளில் விஸ்வரூபம் எடுத்துள்ளார். உள்துறை அமைச்சகத்தை கையில் வைத்துள்ள முதல்வர் போதை பொருட்கள் கடத்தல் விஷயத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைத்து இதை ஒரு சமுதாய இயக்கமாக ஒருங்கிணைக்க வேண்டும். வருகின்ற ஏழு மற்றும் எட்டாம் தேதிகளில் தென்காசியில் போதைப் பொருளுக்கு எதிரான நிகழ்ச்சி நடத்த இருக்கிறோம்.

நாம் தமிழர் கட்சியின் தலைவர் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவருக்கு சின்னம் வேண்டும் என்றால் அவர் முதலில் விண்ணப்பிக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக சீமான் இருந்திருந்தால் அந்த சின்னம் அவருக்காக இருக்கும். ஆனால் அவர் அங்கீகரிக்கப்பட்ட கட்சி இல்லை என்பதால் சின்னம் கிடைக்கவில்லை. சீமானின் கையைப் பிடித்து நாம் தமிழர் கட்சிக்கு சின்னம் புதுப்பித்தலுக்கு விண்ணப்பிக்க வேண்டாம் என்று அண்ணாமலை கூறினேனா? சின்னம் கிடைக்காததற்கு அண்ணாமலைக்கும் என்ன சம்பந்தம்?

முதலில் சீமான் உண்மையைத் தெரிந்து பேச வேண்டும். முதலில் மோடியை திட்டுவார். தற்போது அண்ணாமலையை திட்ட ஆரம்பித்துள்ளார். பிரதமர் மோடி ராஜாஜி குறித்தும், கர்மவீரர் காமராஜர் குறித்தும் பேசி உள்ளார். விஜயகாந்த் குறித்தும் பேசியிருக்கிறார். பல்லடத்தில் எம்ஜிஆர் ஜெயலலிதா உள்ளிட்டோரை பற்றியும் பேசியுள்ளார்கள். அனைத்து தலைவர்களின் பண்பை குறித்தும் தான் பேசி இருக்கிறார்கள். பிவி நரசிம்மராவ் குறித்து பேசி இருக்கிறோம். காங்கிரஸ் வாக்கு வேண்டுமென்றா நாங்கள் பேசினோம்? பிரணாப் முகர்ஜி, நரசிம்மராவ் மற்றும் கட்சியில் இல்லாதவர்களுக்கு கூட இதுவரை 10 பாரத ரத்னா விருதுகள் கொடுத்துள்ளோம். அபத்தமான பேச்சு தான் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் பேச்சு. புதுச்சேரியை போல் இல்லாமல் தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்கள் தான் பாரதிய ஜனதா போஸ்டர்களில் இருப்பார்கள்.

தமிழகத்தில் தலைவர்களை பற்றி பிரதமர் பேசுவது வாக்குக்காக அல்ல. மற்ற கட்சிகளின் வாக்கு வங்கி கரைகிறது என்பதால் அவர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இப்போது இருக்கக்கூடிய தலைவர்கள் அவர்களின் பாதையில் செல்வதில்லை என்று அவர்களுக்கே தெரியும் என்பதால், ஆதங்கத்தில் அவர்கள் பேசி வருகிறார்கள். பாராளுமன்ற தேர்தலைப் பொறுத்தவரை 39 தொகுதிகளிலும் எனக்கு பணிகள் இருக்கிறது. அதை செய்து கொண்டிருக்கிறேன். எனக்கு விருப்பு வெறுப்பு எதுவும் இல்லை. பிரதமர் மோடி என்ன சொன்னாலும் அதற்கு கட்டுப்படுகின்றேன். போட்டியிட நான் தயாராக இருக்கிறேன் என்று சொல்லவே இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!