கோவையில் இருந்து அபுதாபிக்கு வாரத்திற்கு 3 நாட்கள் விமான சேவை : ஆகஸ்ட் 10ம் தேதி துவக்கம்..!

கோவையில் இருந்து அபுதாபிக்கு வாரத்திற்கு 3 நாட்கள் விமான சேவை : ஆகஸ்ட் 10ம் தேதி துவக்கம்..!
X

கோவை விமான நிலையம்

வருகின்ற ஆகஸ்ட் 10 ஆம் தேதி முதல் கோவை - அபுதாபிக்கு விமான சேவை தொடங்குவதாக இண்டிகோ விமான நிறுவனம் தெரிவித்துள்ளது

தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்து இரண்டாவது பெரிய நகரமாக கோவை விளங்கி வருகிறது. இங்கு பல தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அதனால் இங்கே விமான சேவையை தொழிலதிபர்கள் பெரிதும் நம்பியுள்ளனர். கோவை விமான நிலையத்தில் இருந்து சரக்கு ஏற்றுமதி, இறக்குமதியும் நடக்கின்றன. சர்வதேச விமான நிலையமாக செயல்படும் கோவையில் இருந்து டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு போன்ற பல நகரங்களுக்கு சிங்கப்பூர், ஷார்ஜா போன்ற நாடுகளுக்கும் இடையே விமான போக்குவரத்து செயல்பட்டு வருகிறது.

அதுமட்டுமின்றி கோவை விமான நிலையத்தில் இருந்து 30க்கும் மேற்பட்ட விமான சேவைகள் 24 மணி நேரமும் இயங்கி வருகிறது. அதேசமயம் பல்வேறு வெளிநாடுகளுக்கு விமான சேவையை நீட்டிக்க வேண்டுமென தொழில் துறையினர் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் வருகின்ற ஆகஸ்ட் 10 ஆம் தேதி முதல் கோவை சர்வதேச விமான நிலையத்திலிருந்து அபுதாபிக்கு விமான சேவை தொடங்குவதாக இண்டிகோ விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. வாரத்தில் மூன்று நாட்கள் இயங்க உள்ளதாகவும் காலை 7.30 மணிக்கு கோவை விமான நிலையத்தில் புறப்படும் இண்டிகோ விமானம் - பிற்பகல் 11:30 மணிக்கு அபுதாபி சென்றடையும் என தெரிவித்துள்ளது.

அதேபோல அபுதாபியில் இருந்து பிற்பகல் 1 மணிக்கு கிளம்பும் இண்டிகோ விமானம், மாலை 6.30 மணிக்கு கோவை விமான நிலையம் வந்தடையும் என தெரிவித்துள்ளது. இந்த புதிய விமான சேவையால் கோவை தொழில்துறையினர் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்