கோவையில் இரண்டாவது முறை வாக்களிக்க முயன்றவர் கைது
திருநாவுக்கரசு
கோயம்புத்தூர் பாராளுமன்ற தொகுதியில் 582 மையங்களில் 2059 வாக்குச்சாவடிகளில் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கியது முதல், மாலை 6 மணி வரை பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர்.
கோவை நல்லாம்பாளையம் தண்டல் முத்தாரம்மன் கோவில் பகுதியில் வசித்து வருபவர் திருநாவுக்கரசு(52). இவர் ஒர்க்சாப் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் கோவை மக்களவைத் தொகுதி, வடக்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட நல்லாம்பாளையம் மாநகராட்சி நடுநிலை பள்ளியில் உள்ள பூத் எண் 145ல் வாக்களிக்க சென்றுள்ளார். அப்போது கையில் மை வைக்கும் ஊழியரிடம் வலது கை ஆள்காட்டி விரலை காண்பித்துள்ளார். அப்போது அங்கிருந்து அதிகாரிகள் இடது கை விரலை பார்க்கும் போது, அவர் ஏற்கனவே ஒரு இடத்தில் வாக்களித்து விட்டு இரண்டாவது முறையாக வாக்களிக்க வந்தது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து தேர்தல் நடத்தும் அதிகாரி லதா மகேஸ்வரி கவுண்டம்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் காவல் துறையினர் திருநாவுக்கரசை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது தனக்கு காந்திபுரம் மற்றும் நல்லாம்பாளையம் ஆகிய இரண்டு இடங்களில் ஓட்டு இருப்பதாகவும், காந்திபுரம் பகுதியில் வாக்களித்து விட்டு நல்லாம்பாளையம் வந்ததாகவும் தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து திருநாவுக்கரசின் மீது 171(D)- போலியான பெயரில் வாக்களித்தல் மற்றும் 171 F(2)- தகாத வாக்கு செலுத்துதல் ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது பிணையில் விடுவிக்கப்பட்டார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu