தரமான சாலைப்பணி கோரி முன்னாள் மேயர் போராட்டம்

தரமற்ற வகையில் புதிய சாலை அமைப்பதாக குற்றம்சாட்டி, கோவை மாநகராட்சி முன்னாள் மேயர் வெங்கடாச்சலம் போராட்டத்தில் ஈடுபட்டார்.

கோவை சாய்பாபா காலனி பகுதியில், பழுதடைந்த சாலைகளுக்கு மாற்றாக புதிய சாலை, மாநகராட்சி சார்பில் போடப்பட்டு வருகிறது.

இது தரமற்ற வகையில் அமைக்கப்பட்டு வருவதாகக்கூறி, கோவை மாநகராட்சி முன்னாள் மேயர் வெங்கடாச்சலம் மற்றும் முன்னாள் மாமன்ற உறுப்பினர் காயத்திரி ஆகியோர் அப்பகுதி மக்களுடன் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

இதுகுறித்து, முன்னாள் மேயர் வெங்கடாச்சலம் கூறுகையில், "பழுதடைந்த சாலைகளை சரி செய்து தர வலியுறுத்தி மாகராட்சியிடம் தெரிவித்த நிலையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சாலைகளை தோண்டி புதிய சாலை அமைக்காமல் ஏற்கனவே இருந்த சாலைகள் மீது தரமற்ற வகையில் சாலைகள் அமைக்கப்படுகிறது.

இவ்வாறாக போடப்படும் சாலைகளால் வீடுகள் தாழ்வான நிலை ஏற்பட்டு மழை காலங்களில் தண்ணீர் புகுந்து மக்கள் அவதிப்படுவர். சாலை திட்டப்பணிகள் குறித்து அறிவிப்புகள் வெளியிடாமல் இரவோடு இரவாக சாலை அமைக்கபடுகிறது. தரமான வகையில் சாலை அமைத்து தர வேண்டும். அதிகாரிகள் பேச்சு நடத்தி உத்தரவாதம் அளித்தால் மட்டுமே கலைந்து செல்வோம் இல்லையெனில் காத்திருப்பு போராட்டம் தொடரும்" எனத் தெரிவித்தார்.

Tags

Next Story