அரசின் தொழிற்பேட்டை திட்டத்தை எதிர்த்து தொடர்ந்து போராடுவோம்: விவசாயிகள் உறுதி
பைல் படம்
கோவை மாவட்டம், அன்னூர் வட்டாரத்தில் தனியார் நிறுவனங்கள் தொழில் தொடங்குவதற்கு எந்தவிதத் தடையும்இல்லை என்று தெரிவித்துள்ள விவசாயிகள் சங்கத்தினர், அரசின் தொழில்பேட்டை திட்டத்தை தொடர்ந்து எதிர்ப்போம் என்று அறிவித்துள்ளனர்.
கோவை மாவட்டம், அன்னூர், மேட்டுப்பாளையம் வட்டாரங்களில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம்(டிட்கோ) மூலம் 3,862 ஏக்கரில் தொழில்பேட்டை அமைக்கப்படும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த தொழில் பேட்டைக்கு வேளாண் நிலங்கள் கையகப்படுத்துவதைக் கண்டித்து அப்பகுதி விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே, தொழில்பேட்டை அமைப்பதற்கு வேளாண் நிலங்கள் கையகப்படுத்தப்படமாட்டாது என்று தொகுதி எம்பி ஆ. ராசா தெரிவித்திருத்தார். இந்நிலையில் நமது நிலம் நமதே விவசாயிகள் சங்கத்தலைவர் ரவிக்குமார், செயலர் ஏ.வி. ராஜ் ஆகியோர் கோவையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தொழில்பேட்டை அமைப்பதற்கு விளை நிலங்களை கையகப்படுத்தமாட்டாது என்ற ஆ. ராசாவின் கருத்தை வரவேற்கிறோம். எனினும் எங்களது கோரிக்கை ஐம்பது சதவீதம் மட்டுமே நிறைவேறியுள்ளது. எங்கள் பகுதியில் தொழில்பேட்டை வரவே கூடாது என்பதை வலியுறுத்தி தொடர்ந்து போராடுவோம்.
எங்கள் பகுதிக்கு பவானி ஆற்றிலிருந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டுகளில் நல்ல மழை பெய்து ஓடைகள் அனைத்திவும் நீர் ஓடிக்கொண்டிருக்கிறது. எங்களின் முக்கியப் பயிராக வாழை சாகுபடி உள்ளது. அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை நம்மி மட்டுமே நாங்கள் இல்லை. எங்கள் பகுதியில் தரிசு நிலம் என்ற பேச்சுக்கே இடமில்லை.
எனவே, எங்கள் பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்பதுதான் எங்களது இலக்காகும். எங்கள் பகுதியில் சுமார் இரண்டாயிரம் ஏக்கரில் உள்ள தனியார் நிலத்தில் மட்டுமே தொழில்பேட்டை தொடங்கப்படும் என அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால் எங்கள் பகுதியில் பெங்களூருவைச் சேர்ந்த நிறுவனத்துக்கு 1200 நிலம் மட்டுமே உள்ளது. அதுவும் ஒரே இடத்தில் இல்லை. அந்த நிலத்தில் சுமார் 450 ஏக்கர் நிலங்களில் பிரச்னை உள்ளது. இந்த ஆதாரங்களே எங்களுக்கு போதும். மேலும் தனியார் நிறுவனங்கள் அவர்களுக்கான இடத்தில் தொழில் தொடங்குவதற்கு எந்தத் தடையும் இல்லை.
தனியார் நிறுவனங்கள் தொழில் அனுமதிக்காக உள்ளூர் நிர்வாகத்தை அணுகும்போது அவர்கள் எந்தவிதமான தொழிலை தொடங்கவுள்ளார்கள் என்பதை நாங்கள் கண்காணித்துக் கொள்ள முடியும். ஆனால், தொழில்பேட்டைகளில் அப்படியான சூழல் இருக்காது. மேலும் கோவையைச் சேர்ந்த தொழில் முனைவேருக்கு அரசு தொழில்பேட்டை தொடங்கி கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்களை இதை கேட்கவே இல்லை என்று எங்களிடம் கூறியுள்ளனர்
மேலும் ஜிஎஸ்டி, பண மதிப்பிழப்பு, கொரோனா, மின்கட்டண உயர்வு போன்ற காரணங்களால் புதிய தொழில் தொடங்கும் எண்ணம் இல்லை என்றுதான் தொழில்முனைவோர் கூறியிருக்கின்றனர். எங்கள் போராட்டத்தின் பின்னணியில் பாஜக இருப்பதாகக்கூறி பாஜகவையோ அதன் மாநிலத்தலைவர் அண்ணாமலையையோ எங்களுடன் முடிச்சு போட வேண்டாம். அண்ணாமலை செய்யக்கூடிய எல்லாச்செயல்களுக்கும் நாங்கள் பொறுப்பல்ல. எங்களின் போராட்டத்துக்கு அதிமுக, பாஜக. காங்கிரஸ், மார்க்சிஸ்ட், நாம் தமிழர், அதிமுக(ஓபிஎஸ்) உள்ளிட்ட கட்சியினரின் ஆதரவும் உள்ளது என்றனர்.
இதைத்தொடர்ந்து நூற்றுக்கணக்கான விவசாயிகள் ஆடிஸ் வீதியிலிருந்து ஆட்சியர் அலுவலகத்துக்கு ஊர்வலமாகச் சென்று மனு அளிக்க முடிவு எடுத்தனர். ஆனால், போக்குவரத்து பாதிக்கப்படும் என்று கூறி காவல்துறையினர் அனுமதி மறுத்தனர். இதையடுத்து ஆட்சியர் அலுவலகத்திலிருந்து வந்த வருவாய்த்துறை அதிகாரி விவசாயிகளிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டதையடுத்து விவசாயிகள் கலைந்து சென்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu