பாஜகவிற்கு அளிக்கும் ஓட்டு செல்லாத‌ ஓட்டாக‌ போய்விடும் : எஸ்.பி. வேலுமணி

பாஜகவிற்கு அளிக்கும் ஓட்டு செல்லாத‌ ஓட்டாக‌ போய்விடும் : எஸ்.பி. வேலுமணி
X

எஸ்.பி.வேலுமணி

திமுகவிற்கு யாரும் வாக்களிக்க மாட்டார்கள். பாஜக உள்ளிட்ட வேறு எந்த கட்சிக்கு அளிக்கும் ஓட்டு செல்லாத‌ ஓட்டாக‌ போய்விடும்

போதைப்பொருள் கட்டுப்படுத்த திமுக அரசு தவறியதை கண்டித்து, அதிமுகவினர் இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன் ஒரு பகுதியாக கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு கோவை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன் அர்ச்சுணன், பி.ஆர்.ஜி. அருண்குமார், தமோதரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, “எதிர்கட்சி தலைவராக கடுமையான அறிக்கைகள் மூலம் தமிழக மக்களை காப்பாற்றி கொண்டு உள்ளார். திமுக நிர்வாகி 2 ஆயிரம் கோடி போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டுள்ளார். தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் வெளிநாடுகளிலும் கஞ்சா விற்கிறார்கள்.

மாணவர்களையும் இளைஞர்களையும் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையாக்கி வருகிறார்கள். திமுக பொறுப்பாளர்கள் கஞ்சா விற்கிறார்கள். கஞ்சா விற்பனையை திமுக அரசு கட்டுப்படுத்தப் இல்லை. பத்திரிகையாளர்களும் காவல் துறையும் சரியாக இருந்தால் இது எல்லாம் நடக்காது. மத்திய அரசு கஞ்சா விற்பனையை கண்டுபிடித்து கட்டுப்படுத்த வேண்டும். திமுக அரசு 3 ஆண்டுகளில் எந்த திட்டமும் தரவில்லை. விளம்பரத்தில் மட்டுமே இந்த அரசு உள்ளது. சிறுவாணி அணையில் தண்ணீரை கேரள அரசு குறைத்ததை தட்டி கேட்கவில்லை.

திமுக அரசு செய்தது எல்லாம் சொத்து வரி, மின்கட்டணம், பால் விலையை உயர்த்தியது தான். 38 எம்.பி.க்கள் தெண்டமாக இருக்கிறார்கள். அவர்கள் நாடாளுமன்றத்தில் எந்த பிரச்சனை பற்றியும் பேசவில்லை. 40 தொகுதிகளிலும் ஜெயிக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் கூறுகிறார். ஆனால் ஜெயித்த 38 எம்.பி.க்கள் எதுவும் செய்யாமல் தெண்டமாக உள்ளார்கள். கோவையை சுற்றியுள்ள 5 தொகுதிகளின் எம்.பி.க்களை பார்க்க முடியவில்லை. அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தான் பணிகளை சிறப்பாக செய்து வருகிறார்கள்.

நாடாளுமன்ற தேர்தல் வருவதால் டிசைன் டிசைனாக வந்து திமுகவினர் ஏமாற்றுபவர்கள். திமுக அரசு மகளிர் உரிமை தொகை பாதி பேருக்கு தான் தந்துள்ளார்கள். அது திமுக குடும்ப பணம் இல்லை. உங்கள் பணத்தை தான் கொடுக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு வந்தால் அனைவருக்கும் மகளிர் உரிமை தொகை கொடுப்பார். அதைவிட கூடுதலாக தருவார். எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சராக வர வேண்டும் என ஒட்டுமொத்த மக்கள் நினைக்கின்றனர். தொழில்கள் முடங்கி விட்டது. கஞ்சா விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும். அதற்கு எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வர வேண்டும். கோவை மாவட்டத்திற்கு வளர்ச்சி வேண்டும் என்றால் மீண்டும் எடப்பாடியார் முதலமைச்சராக வர வேண்டும்.

எடப்பாடி பழனிசாமி தலைமையில் அற்புதமான கூட்டணி அமையும். திமுகவிற்கு யாரும் வாக்களிக்க மாட்டார்கள். அப்படி கஷ்டப்படுத்தி விட்டார்கள். பாஜக உள்ளிட்ட வேறு எந்த கட்சிக்கு அளிக்கும் ஓட்டு செல்லாத‌ ஓட்டாக‌ போகி விடும். திமுகவிற்கு சாதகமாகி விடும். ஒவ்வொரு ஓட்டையும் இரட்டை இலைக்கு போட வேண்டும். இரட்டை இலைக்கு ஓட்டு போட்டால் தான் நமது குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்கும். திமுக கூட்டணி கட்சிகள் திமுகவிற்கு அடிமை. நாங்கள் எப்போதும் யாருக்கும் அடிமை இல்லை. நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெல்லும். கோவை மாவட்டத்தை புறக்கணித்த திமுகவை புறக்கணிப்போம்” எனத் தெரிவித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!