அயோத்தி ராமர் கோயில் வழிபாடு தொடர்பாக தி.மு.க. அரசுக்கு வானதி சீனிவாசன் கண்டனம்

அயோத்தி ராமர் கோயில் வழிபாடு தொடர்பாக தி.மு.க. அரசுக்கு வானதி சீனிவாசன் கண்டனம்
X

வானதி சீனிவாசன்

அயோத்தி ராமர் கோயில் வழிபாடு தொடர்பாக தி.மு.க. அரசுக்கு வானதி சீனிவாசன் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

பா.ஜ.க. தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

அயோத்தியில் ஸ்ரீராமர் கோயில் பிராண பிரதிஷ்டை நாளை நடைபெறவுள்ளது. இதனால் ஒட்டுமொத்த நாடும் விழாக்கோலம் பூண்டுள்ளது. நம் தமிழகத்தில் கோயில்களில் சிறப்பு பூஜைகள், பக்திப் பாடல்களை கூட்டாகப் பாடும் பஜனை, அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஆன்மிக அமைப்புகள் மட்டுமல்லாது, பொதுமக்களும், பல்வேறு சமூக அமைப்புகளும் ஏற்பாடு செய்துள்ளன.

ஆனால், அயோத்தி ராமர் கோயில் திறக்கப்படும் நாளில் கோயில்களில் சிறப்பு வழிபாடு, அன்னதானம் உள்ளிட்ட எந்த நிகழ்ச்சியையும் நடத்த அனுமதிக்கக் கூடாது என தி.மு.க. அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால், 'கோயில்களுக்கு வராதீர்கள்' என இந்துக்கள் அங்குள்ள மதச்சார்பற்ற அதிகாரிகளால் விரட்டப்படுகின்றனர்.

கோயில்கள் மட்டுமல்லாது திருமண மண்டபங்கள் உள்ளிட்ட தனியார் இடங்கள், கோயில்களுக்கு வெளியே பொது இடங்களில் ராமர் படம் வைத்து வழிபடவும், அன்னதானம் வழங்கவும் ராம பக்தர்களும், பொது மக்களும் ஏற்பாடு செய்துள்ளனர். ஆனால், தி.மு.க. அரசின் காவல் துறை அவர்களை அழைத்து, எந்த நிகழ்ச்சியும் நடத்தக் கூடாது என மிரட்டியுள்ளனர். எந்தவொரு ஜனநாயக ஆட்சியிலும் நடக்க முடியாத அட்டூழியம் இது.

அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள மதச் சுதந்திரம், வழிபாட்டு உரிமை போன்ற அடிப்படை உரிமைகளுக்கு எதிராக தி.மு.க. அரசு செயல்படுகிறது. இது கடும் கண்டனத்திற்குரியது. இந்துக்களுக்கு தி.மு.க. அரசின் இந்த அராஜகங்கள் கொடுங்கோல் ஆக்கிரமிப்பாளன் அவுரங்கசீப் ஆட்சியை நினைவூட்டுகிறது. ராமர் கோயிலுக்காக 500 ஆண்டு காலம் போராடிய இந்துக்கள், ராமர் கோயில் திறப்பு நாளை கொண்டாடவும் போராட வேண்டியிருக்கிறது. பிரதமர் மோடி அவர்கள் மூன்று நாட்களாக தமிழகத்தில் ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம் என பயணம் மேற்கொண்டதால் தமிழக மக்களிடம் ஏற்பட்டுள்ள எழுச்சியை அடக்க நினைக்கிறது தி.மு.க. அரசு. அடக்குமுறைகளால் மக்களின் பக்தி உணர்வை, ஆன்மிக எழுச்சியை தடுத்துவிட முடியாது என்பதை தி.மு.க. அரசு உணர வேண்டும்.

எனவே, நாளை கோயில்கள், திருமண மண்டபங்கள், பொது இடங்களில் சிறப்பு வழிபாடு, பஜனை, அன்னதானம் நடத்த தி.மு.க. அரசு தடை விதிக்கக் கூடாது. இதற்காக பிறப்பிக்கப்பட்டுள்ள வாய்மொழி உத்தரவை இந்து சமய அறநிலையத்துறை திரும்பப்பெற வேண்டும். கோயில்கள், பொது இடங்களில் நாளை சிறப்பு வழிபாடு, விழாக்கள் நடத்த அன்னதானம் வழங்க தடை இல்லை என தமிழ்நாடு அரசு வெளிப்படையாக உடனே அறிவிக்க வேண்டும்.

இவ்வாறு வானதி சீனிவான் அந்த அறிக்கையில் கூறி உள்ளார்.

Tags

Next Story
ஈரோடு: வயதான தம்பதி மீது மோட்டார் சைக்கிளில் மோதிய கூலி தொழிலாளி பலி