பங்கு சந்தையில் லாபம் பெற்று தருவதாக கூறி பல கோடி மோசடி செய்த 2 பேர் கைது

பங்கு சந்தையில் லாபம் பெற்று தருவதாக கூறி பல கோடி மோசடி செய்த 2 பேர் கைது
X

பங்கு சந்தை மோசடி தொடர்பாக கைது செய்யப்பட்ட இருவர்.

பங்கு சந்தையில் லாபம் பெற்று தருவதாக கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோவை சுங்கம் பகுதியைச் சேர்ந்தவர் அருண் குமார். இவர் மாநகர சைபர் கிரைம் காவல் துறையில் புகார் அளித்து இருந்தார். அதில் அவர் செல்போனுக்கு ஆன்லைனில் பங்கு சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என்ற தகவல் வந்ததாகவும், இதனை நம்பி அவர் அதில் குறிப்பிட்டு இருந்த செல்போனில் தொடர்பு கொண்டு பேசி உள்ளார். இதனை தொடர்ந்து லாபத்துடன் முதலீடு செய்வது தொடர்பான வீடியோவை வாட்ஸ் அப்பில் அனுப்பி இருந்தனர். மேலும் தங்களுக்கு பணம் அனுப்பினால் பங்குச் சந்தையில் முதலீடு செய்து அதிக லாபம் ஈட்டி தருவதாக கூறினர். இதனை நம்பி பல்வேறு தவணையாக ரூபாய் 34 லட்சம் அனுப்பி உள்ளார். லாபத் தொகை குறித்து கேட்ட போது பணம் முதிர்வு அடைவதாக தெரிவித்தனர்.

பின்னர் லாபத் தொகையையும், பணத்தையும் திரும்பி கேட்ட போது தராமல் மோசடி செய்து விட்டனர். இது குறித்து நடவடிக்கை எடுத்து அவர் பணத்தை மீட்டு தர வேண்டும் என்றும் அதில் கூறியிருந்தார். இந்த புகாரையடுத்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில் செல்போன் எண்கள் மற்றும் பல்வேறு ஆன்லைன் தகவலின் அடிப்படையில் துடியலூரை சேர்ந்த தனசேகரன், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ரவி சந்துரு ஆகிய இரண்டு பேரை கைது செய்து விசாரணை நடத்தினர். இவர்கள் மீது மோசடி உள்ளிட்ட பல்வேறு சட்டப் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

கைதான இருவரிடம் இருந்து பல்வேறு வங்கிகளின் நூற்றுக் கணக்கான காசோலை புத்தகங்கள், கிரெடிட் கார்டுகள், ஏ.டி.எம் கார்டுகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் பங்குச் சந்தையில் லாபம் பெற்று தருவதாக கூறி தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 152 பேரிடம் இதுபோன்று கோடிக் கணக்கில் மோசடி செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. பின்னர் அவர்கள் இரண்டு பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!