கோவையில் ரமலான் தொழுகையில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள்

கோவையில்  ரமலான் தொழுகையில்  பங்கேற்ற ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள்
X

கோவையில் ரமலான் தொழுகையில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் 

இஸ்லாமியர்கள் ஒருவருக்கு ஒருவர் கட்டித் தழுவி ரமலான் வாழ்த்துகளை பரிமாறி கொண்டனர்.

கோவையில் ஒரே இடத்தில் ஆயிரக்கணக்கானோர் கூடி ரமலான் தொழுகையில் ஈடுபட்டு தங்களது நோன்பு கடமையை நிறைவேற்றினர்.

கோவை கரும்புக்கடை பகுதியில் இஸ்லாமியர்கள் ரமலான் தொழுகையில் ஈடுபட்டனர். ஈகை பெருநாளான ரமலான் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது. கோவையில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கக்கூடிய பகுதிகளான உக்கடம், கரும்புக்கடை, கோட்டை மேடு, போத்தனூர், குனியமுத்தூர், சாய்பாபா காலனி ஆகிய பகுதிகளில் ரமலானை முன்னிட்டு ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் ஒன்றிணைந்து ரம்ஜான் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

இதன் ஒரு பகுதியாக கோவை கரும்புக்கடையில் உள்ள இஸ்லாமிய பள்ளி மைதானத்தில் சிறப்பு தொழுகை நடந்தது. இந்த தொழுகையில் மஸ்ஜித் ஹூதா பள்ளிவாசல் இமாம் இஸ்மாயில் இம்தாதி தொழுகை நடத்தி சிறப்பு சொற்பொழிவு ஆற்றினார்.

இதில் ஆயிரக்கணக்கானோர் புத்தாடைகள் அணிந்து சிறப்பு தொழுகையில் பங்கேற்றனர். இஸ்லாமியர்கள் ஒருவருக்கு ஒருவர் கட்டித் தழுவி ரமலான் வாழ்த்துகளை பரிமாறி கொண்டனர். ஏழைகளுக்கு நல உதவிகளையும் செய்தனர். இஸ்லாமியர்களில் பெரும்பான்மை பிரிவான சுன்னத் ஜமாத் சார்பில் ரமலான் சிறப்பு தொழுகை இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.இதேபோல கோவை மாநகர் மற்றும் புறநகர் மாவட்டங்களில் பல இடங்களில் இஸ்லாமியர்கள் ஒன்று கூடி ரமலான் தொழுகையில் ஈடுபட்டனர்.

மேட்டுப்பாளையத்தில் பத்தாயிரம் இஸ்லாமியர்கள் ஒரே இடத்தில் தொழுகை.

மேட்டுப்பாளையம், மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி செல்லும் சாலையில் புகழ்பெற்ற ஈத்கா பள்ளிவாசல் அமைந்துள்ளது. இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான ரமலான்பண்டிகையை முன்னிட்டு இன்று இப்பள்ளி வாசலில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள 22 பள்ளிவாசல்களை சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமிய பெருமக்கள் இந்த சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

சிறப்பு தொழுகையினை மேட்டுப்பாளையம் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் ஹாஜி. ஹலீபுல்லா பாசில் பாகவி துவக்கி வைத்தார். வேலூர் அல் பாக்கியத்துல் ஷாலிகாத் பள்ளிவாசலின் பேராசிரியர் ஹாஜி. அப்துல்ஹமீது சிறப்பு பயான் உரைஆற்றினார்.

பின்னர், தொழுகை முடிந்தவுடன் இஸ்லாமியர்கள் ஒருவரை யொருவர் ஆரத்தழுவி தங்களது வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். சிறப்புத் தொழுகையினை முன்னிட்டு ஊட்டி சாலையில் சற்று நேரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது. இந்த சிறப்புத்தொழுகையில் புத்தாடை அணிந்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.

கோவில்பாளையத்தில் ரமலான் சிறப்பு தொழுகை:

ரமலான் மாதம் இஸ்லாமியர்களின் புனித மாதமாக கருதப்படுகிறது. இந்த மாதம் முழுவதும் இஸ்லாமியர்கள் நோன்பு இருந்து ரமலான் பண்டிகையை கொண்டாடுகின்றனர். ரமலான் பண்டிகையையொட்டி கோவையை அடுத்த சர்க்கார் சாமகுளம் பேரூராட்சி கோவில்பாளையத்தில் உள்ள மதரஸா மஸ்ஜிதேநூர் பள்ளி வாசலில் முன்பு உள்ள சாலையில் ரமலான் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

இதில் சுமார் 2000-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு தொழுகை நடத்தினர். புத்தாடைகள் அணிந்து தொழுகையில் பங்கேற்ற இஸ்லாமியர்கள் ஒருவருக்கொருவர் கட்டி தழுவி ரமலான் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!