பட்டா கிடைக்காத விரக்தியில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற நபர்
தீக்குளிக்க முயன்ற சண்முக சுந்தரத்தை போலீசார் பிடித்தனர்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இந்த முகாமில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் அனைத்து துறை அதிகாரிகள் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி வைப்பது வழக்கம். மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து தங்களது குறைகளை மனுவாக எழுதி கொடுக்க முடியும் என்பதால் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் மக்கள் வருவார்கள். இதன் காரணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முழுவதும் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்படும்.
அந்த வகையில் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. அப்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கோவை பட்டணம் பகுதியை சேர்ந்த சண்முகசுந்தரம் என்பவர் மனு அளிக்க வந்தார். ஆட்சியர் அலுவலக நுழைவுவாயில் அருகே சண்முக சுந்தரம் திடீரென பாட்டிலில் கொண்டு வந்திருந்த பெட்ரோலை உடல் மீது ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார்.இதனையடுத்து அங்கிருந்த போலீசார் தீக்குளிக்க முயன்ற சண்முகசுந்தரத்தை தடுத்து நிறுத்தினர். பெட்ரோல் கேனை பிடுங்கி தூர வீசினார்கள்.
பின்னர் காவல் துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கடந்த இரண்டு வருடமாக சண்முக சுந்தரம் தன்னுடைய நிலத்திற்கு பட்டா, சிட்டா கேட்டு ஆட்சியரிடம் தொடர்ந்து மனு அளித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கூறி உள்ளார்.
இதனைத்தொடர்ந்து சண்முகசுந்தரத்தை பந்தய சாலை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வருபவர்கள் தங்களது பிரச்சினை தீரவில்லை என்ற விரக்தியில் இதுபோன்ற அசம்பாவித சம்பவங்களில் ஈடுபட்டுவிடக்கூடாது என்பதற்காக தான் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மனு கொடுப்பதற்காக வரும் அனைவரையும் போலீசார் சோதனை செய்த பின்னர் தான் உள்ளே அனுப்புகிறார்கள். மேலும் அவர்களது பை உள்பட உடமைகளையும் போலீசார் சோதனை செய்து மண்ணெண்ணெய் மற்றும் பெட்ரோல் பாட்டல், கேன் வைத்திருந்தால் அவற்றை பறிமுதல் செய்து விடுவார்கள். ஆனால் போலீசாரின் கண்களில் மண்ணை தூவிவிட்டு சண்முக சுந்தரம் எந்த வாசல் வழியாக உள்ளே வந்தார் என்பது பற்றியும் போலீசார் கவனக்குறைவாக நடந்து கொண்டார்களா? என்பது பற்றியும் விசாரணை நடந்து வருகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu