கோவையில் கஞ்சா போதை மாத்திரைகள் விற்பனை செய்த துணை நடிகர்கள் கைது

கோவையில் கஞ்சா போதை மாத்திரைகள் விற்பனை செய்த துணை நடிகர்கள் கைது
X

கைது செய்யப்பட்டவர்கள்

கோவையில் கஞ்சா போதை மாத்திரைகள் விற்பனை செய்த துணை நடிகர்களை போலீசார் கைது செய்தனர்.

கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் காவல் துறையினர் கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் விற்பனை தொடர்பாக தொடர்ச்சியாக சோதனைகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் கோவை சுங்கம் புறவழிச்சாலையில் உள்ள தனியார் கல்லூரி அருகே போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

அதன் பேரில் ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் திடீர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்தப் பகுதியில் சந்தேகத்துக்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த ஐந்து பேரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களின் உடமைகளை சோதனையிட்டனர். அதில் அவர்கள் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் வைத்திருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில், சினிமா துறையில் வேலை செய்யும் துணை நடிகர்களான கோவை புல்லுக்காடு பகுதியை சேர்ந்த யாசிக் இலாகி (26), போளுவாம்பட்டியைச் சேர்ந்த மரியா(31), சென்னையைச் சேர்ந்த சினேகா ஸ்ரீ, ஆர்.எஸ்.புரம் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன்(24), சாரமேடு பகுதியைச் சேர்ந்த முஜிபூர் ரகுமான் (27) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து ஒரு கிலோ 410 கிராம் கஞ்சா மற்றும் 200 போதை மாத்திரைகள், 3 செல்போன்கள், ஒரு இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

மேலும் கைது செய்யப்பட்ட ஐவரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில் இந்த வழக்கில் கள்ளாமேடு பகுதியைச் சேர்ந்த அப்துல் கலாம், கரும்புக்கடை பகுதியைச் சேர்ந்த ஆசிக், ரிஸ்வான், வட மாநிலத்தைச் சேர்ந்த சச்சின் ஆகிய நால்வருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்த நிலையில் நால்வரையும் போலீசார் தேடி வருகின்றனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட ஐந்து பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் காவல் துறையினர் அடைத்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!