குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: எஸ். பி. வேலுமணி

குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: எஸ். பி. வேலுமணி
X

எஸ்.பி. வேலுமணி மனு

கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் கடுமையான குடிநீர் பிரச்சினை இருக்கின்றது.

கோவை மாவட்டத்தில் குடிநீர் தட்டுபாட்டை போக்க உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பாடியிடம் மனு அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, “கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் கடுமையான குடிநீர் பிரச்சினை இருக்கின்றது. குடிநீர் பிரச்சினை வராத அளவிற்கு அதிகமான கூட்டுகுடிநீர் திட்டங்களை அதிமுக ஆட்சியில் செய்து இருந்தோம்.

அதிமுக ஆட்சியில் குளங்கள், அணைகள் தூர் வாரப்பட்டது, நீர் மேலாண்மை திட்டம் செயல்படுத்தபட்டது. ஆனால் இப்போது இவை செயல்படுத்த படுவதில்லை. கோவை மாவட்டத்தில் பில்லூர், சிறுவாணி, அழியார் அணைகள் முக்கிய குடிநீர் ஆதாரம். இந்த அணைகள் தூர் வாரி இருக்க வேண்டும். புதிய ஆழ்குழாய் கிணறுகள் கூட இப்போது அமைப்பதில்லை. இது போன்ற குடிநீர் பிரச்சினை வரும் போது லாரிகள் மூலம் தண்ணீர் கொடுக்க ஆட்சியரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பல இடங்களில் அதிகபட்சமாக 20 நாட்கள் வரை பொதுமக்களுக்கு குடி தண்ணீர் வழங்கப்படுவதில்லை. மாநகராட்சி நிர்வாகம் இதை முறையாக கவனிப்பதில்லை. முறையாக குப்பைகள் கூட எடுக்கவில்லை. சிறுவாணி அணையில் கடைசி 5 அடி தண்ணீர் தேக்க விடுவதில்லை. இது குறித்து கேரள அரசிடம் பேச வேண்டும். அத்திக்கடவு, அவினாசி திட்டத்தையும் இந்த அரசு கண்டு கொள்ளவில்லை. எஸ்ஐஎச்எஸ் காலனி பாலம் விரைத்து முடிக்க வேண்டும்.

கோவையில் நடைபெற்று வரும் திட்டங்களை வேகமாக முடிக்க வேண்டும். பொதுக் கழிப்பிடங்கள் கூட சுத்தம் செய்யப்படுவதில்லை. போர்வெல் போட விண்ணப்பித்தால் அனுமதி வழங்கப்படாமல் இருக்கிறது. இதற்கு உடனே அனுமதி அளிக்க வேண்டும். சாலைகள் பழுதடைந்த நிலையில் இருக்கின்றது. அவற்றை வேகமாக போட வேண்டும். பொள்ளாச்சியில் தென்னை விவசாயிகள் மரங்களை காப்பாற்ற லாரியில் தண்ணீர் வாங்கி ஊற்றுகின்றனர். அதையும் அதிகாரிகள் தடுக்கின்றனர். இதை தடுக்கக் கூடாது என ஆட்சியரிடம் வலியுறுத்தி இருக்கிறோம். பல இடங்களில் மண் எடுக்க விடுவதில்லை. கோவை மாவட்ட நிர்வகம் முழுமையாக இயங்குவதில்லை, குடிநீர் பிரச்சினை விரைவில் சரி செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!