‘எங்களின் பிரதமர் வேட்பாளர் யார்?’ கோவை அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன்

‘எங்களின் பிரதமர் வேட்பாளர் யார்?’ கோவை அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன்
X

செய்தியாளர்கள் சந்திப்பில் கோவை அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன்.

‘எங்களின் பிரதமர் வேட்பாளர் யார்?’ என்பது பற்றி கோவை அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் பரபரப்பு பேட்டி அளித்தார்.

கோவை தெப்பக்குளம் மைதானத்தில் அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கோவை பாராளுமன்ற வாக்காளர்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். உங்களது ஓட்டு வளர்ச்சிக்கான‌ ஓட்டாக இருக்க வேண்டும். பலர் பல தேர்தல் அறிக்கைகளை வெளியிடுகிறார்கள். அதில் எது உண்மை, எது பொய் எனத் தெரியவில்லை. திமுக, பாஜக வாக்குறுதிகளை அளித்து விட்டு, எட்டிக் கூட பார்க்கவில்லை. வாயில் சொல்வதை செயலில் காட்ட வேண்டும். திமுக அரசின் மின் கட்டண உயர்வினால் தொழில் துறையினர் பாதிக்கப்பட்டுள்ளனர். பத்து வருடங்களாக பாஜக ஆட்சியில் உள்ளது. அண்ணாமலை 3 ஆண்டுகளாக பாஜக தலைவராக இருக்கிறார். நூல் விலை உயர்வு, ஜிஎஸ்டி வரியினால் தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மத்திய அமைச்சர்களிடம் பல முறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்கு திமுக, பாஜக எதுவும் செய்யவில்லை. இரண்டு கட்சிகளும் ஆட்சியில் இருந்தும் கோவைக்கு எதுவும் செய்யவில்லை. கோவை தொழில்களை அழித்தது மோடி தான். மின் கட்டண உயர்வினால் தொழில் அழிய ஸ்டாலின் தான் காரணம். அதிமுக ஆட்சியில் தான் கோவை வளர்ச்சி அடைந்தது. அண்ணாமலை கோவை மக்களுக்கு என்ன செய்தார்? ஜிஎஸ்டி பிரச்சனை குறித்து ஏன் பிரதமரிடம் பேசவில்லை? நூல் விலை உயர்வு குறித்து ஏன் கேட்கவில்லை? இத்தனை நாட்கள் தூங்கி கொண்டு இருந்தவர்கள், சுயநலத்திற்காக இப்போது வருகிறார்கள். மோடி கோவையில் ரோடு ஷோ வராமல் இருந்திருக்கலாம். அதற்கு பதிலாக ஜிஎஸ்டி வரியை குறைத்து இருக்கலாம். நூல் விலையை குறைத்து இருக்கலாம். முதலமைச்சர் ராகுல்காந்தியை அழைத்து வந்து பொதுக்கூட்டத்தை நடத்தியதற்கு பதிலாக மின்கட்டணத்தை குறைத்து இருக்கலாம்.

இதுவரை அண்ணாமலை எதுவும் செய்யாமல் 100 விஷயங்கள் செய்வேன் என்பதை எப்படி நம்புவது? நான் தொழில்களின் பாதுகாவலனாக நிற்பேன். வேலை வாய்ப்புகளை உருவாக்க ஐடி கம்பெனிகள் கொண்டு வருவோம். கோவை தொகுதியை இந்தியாவின் நெம்பர் 1 நாடாளுமன்ற தொகுதியாக மாற்றுவேன். 6 சட்டமன்ற தொகுதிகளிலும் எம்.பி. அலுவலகம் கொண்டு வருவோம். மக்களின் குறைகளை தீர்க்க வாட்ஸ் அப்பில் புகார் அளிக்கலாம். எங்களின் பிரதமர் வேட்பாளர் என்பது மக்களின் திட்டங்கள் தான். பாஜக தமிழ்நாட்டின் உணர்வுகளை மதிக்கவில்லை. அதனால் தான் கூட்டணியில் இருந்து வெளியே வந்தோம். வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை. நாங்கள் கருத்து கணிப்புகளை நம்புவது இல்லை. மக்களை நம்புகிறோம். களத்தில் நாங்கள் தான் இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!