பொய் சொல்லியே பழக்கப்பட்டவர் அண்ணாமலை: சிங்கை ராமச்சந்திரன் குற்றச்சாட்டு
சிங்கை ராமச்சந்திரன்
கோவை அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன், அக்கட்சி அலுவலகத்தில் செய்தியாளார்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர் கூறுகையில், கோவையில் மக்களுக்கு பல பிரச்சனைகள் உள்ளன. உதயநிதி ஸ்டாலின் கல்லை எடுத்து காட்டுவது, போட்டோ எடுத்து காட்டுவது என கவன ஈர்ப்பிற்காக தேவையில்லாததை செய்து கொண்டுள்ளார். கோவையில் உள்ள சிறு, குறு தொழில்கள் நலிவடைந்து வருகின்றன. திமுக அரசின் மின் கட்டண உயர்வு, பீக் ஹவர் மின் கட்டணம் காரணமாக தொழில் செய்ய முடியாத நிலை உள்ளது.
பாஜக அரசு ஜாப் ஆர்டருக்கு 12 சதவீத ஜிஎஸ்டி வரி விதித்துள்ளதால், தொழில் துறையினர் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். சிறுகுறு தொழில்களுக்காக நான் குரல் கொடுப்பேன். 3 ஆண்டுகளில் பாஜக, திமுக ஒரு வளர்ச்சியை கூட கோவைக்கு கொண்டு வரவில்லை. 3 வருடங்களாக பாஜக தலைவராக உள்ள அண்ணாமலை கோவைக்கு எதுவும் செய்யவில்லை. இதை செய்வேன் அதை செய்வேன் என அவர் சொல்வது அப்பட்டமான பொய். அதிமுக செய்ததை கொச்சைப்படுத்தும் வகையில் 40 சதவீதம் ஊழல் என்கிறார். ஆனால் ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக கோவைக்கு மத்திய அரசு 143 விருதுகளை கொடுத்தது.
அண்ணாமலை பொய் சொல்லியே பழக்கப்பட்டவர். அண்ணாமலை என்றால் பொய். பொய் என்றால் அண்ணாமலை. அண்ணாமலை நம்பிக்கை இல்லாமல் பேசுகிறார். மணல் ரெய்டின் போது கைப்பற்றப்பட்ட டைரியில் அண்ணாமலைக்கு 5 கோடி ரூபாய் கொடுத்தாக இருந்தது. அந்த 5 கோடி ரூபாயை அண்ணாமலை எடுத்து கொண்டு கோவைக்கு வந்துள்ளார். அண்ணாமலை வேட்பாளராக அறிவிக்கப்பட்டதால், தொழில் துறையினர் வருத்தத்தில் உள்ளனர்.
அண்ணாமலை யாத்திரை செல்வதாக தொழில் துறையினரிடம் பணம் வசூல் செய்தார். வேட்பாளரான பின்னர் தொழில் துறையினரை மிரட்டி வசூல் செய்து வருகிறார். நான் சொல்வது தவறு என்றால், அண்ணாமலை என் மீது வழக்கு போடட்டும். நீதிமன்றத்தில் யார் யாரிடம் வசூலித்தார் என்ற விவரங்களை தரத் தயாராக உள்ளோம். இந்த விபரங்களை பட்டியலிட இப்போது எனக்கு நேரமில்லை.
அண்ணாமலை எஸ்.பி. வேலுமணியை விவாதத்திற்கு அழைக்கிறார். அவர் எம்எல்ஏ, அமைச்சர் என பதவி வகித்தவர். பல ஆண்டுகளாக அரசியலில் உள்ளார். ஆனால் அண்ணாமலை பாராசூட்டில் இருந்து குதித்தது போல அரசியலில் குதித்தவர். ரஜினி கட்சி ஆரம்பிக்காததால், பாஜகவில் சேர்ந்தார். போதைப்பொருள் விவகாரம் பற்றி திமுகவும், பாஜகவும் வாய் திறக்கவில்லை. திமுகவும், பாஜகவும் சமமானவை. அண்ணாமலையின் வேட்பு மனுவை நிராகரித்து இருக்க வேண்டும். அபிடவிட்டை 11 மணிக்கு முன்பு தந்திருக்க வேண்டும். ஆனால் அவர் 5.17 க்கு தான் தந்துள்ளார். இது குறித்து ஏன் திமுக வாய் திறக்கவில்லை?
சுயேட்சைகளின் வேட்பு மனுவில் காமா, முற்றுப்புள்ளி வைக்கவில்லை என நிராகரித்துள்ளார்கள். படித்த அறிவாளி என சொல்லும் அண்ணாமலைக்கு இந்த சாதாரண விசயம் தெரியவில்லையா? தோல்வி பயத்தில் அவர் இப்படி செய்திருக்க வேண்டும். கட்சி சொன்னதாலும், செந்தில் பாலாஜி உதவி செய்ததாலும் அவரது வேட்பு மனு ஏற்கப்பட்டிருக்க வேண்டுமென்பது எனது யூகம்.
100 சதவீதம் அபிடவிட் செல்லாது. அவருக்கு 2, 3 சதவீதம் பேர் வாக்களித்தாலும், அவை செல்லாத வாக்குகளாகி விடும். ஜெயிக்காத ஒருத்தருக்கு வாக்களிக்க வேண்டாம். எனது மறைந்த தந்தை குறித்து மன்னிப்பு கேட்க முடியாது என அண்ணாமலை கூறியது, அவர் எப்படிப்பட்டவர் என்ற தரத்தை காட்டுகிறது எனத் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu