ரவுடி மீது துப்பாக்கி சூடு நடத்தியது ஏன்? – காவல் ஆணையாளர் விளக்கம்
காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன்
கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் , காவலர் குடும்பத்தினருக்கு நடைபெற்ற யோகா பயிற்சி நிறைவு விழா இன்று நடைபெற்றது. இந்த நிறைவு விழாவில் கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது இன்று காலை கொடிசியா மைதானத்தில் ரவுடி சுட்டுப் பிடிக்கப்பட்டது தொடர்பாக விளக்கம் அளித்தார். அப்போது பேசிய அவர், “காலையில் சுட்டுபிடிக்கப்பட்ட ஆல்வின் கன்னியாகுமரியில் சரித்திர பதிவேடு குற்றவாளி. அவர் மீது 3 கொலை, 2 கொலை முயற்சி உள்ளிட்ட 15 வழக்குகள் அவர் மீது நிலுவையில் உள்ளன. ரவுடிகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். ஆல்வின் மீது NBW வாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், ஆல்வினை பல்வேறு இடங்களில் மூன்று, நான்கு மாதங்களாக தனிப்படை தேடி வந்தனர்.
15 நாட்களுக்கு முன்பு வேறு மாநிலத்தில் தங்கி இருந்தபோது அவரை தனிப்படை பிடிக்க சென்ற போது தப்பிச் சென்று விட்டார். இந்த நிலையில் இன்று அதிகாலை கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில் கொடிசியா பகுதியில் அவரை காவலர்கள் பிடிக்க முற்பட்டனர். அப்போது ரவுடி ஆல்வின் ராஜ்குமார் என்ற காவலரை கத்தியால் தாக்கியதால் தற்காப்புக்காக ஆல்வின் சுடப்பட்டார். சரித்திர பதிவேடு குற்றவாளிகள் யார், யார் தொடர்ச்சியாக குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்பதை கண்காணித்து வருகிறோம். பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
வழக்குகளில் முறையாக நீதிமன்றங்களில் ஆஜராகாதவர்கள் குறித்தும் கண்காணித்து வருகிறோம். நீதிமன்றங்களில் ஆஜராக வருபவர்கள் மீது பழிக்குப் பழி தாக்குதல் நடக்காத வண்ணம் இருக்க அதற்கான கண்காணிப்புகளும் மேற்கொண்டு வருகிறோம். கடந்த ஆண்டு நடந்த சத்திய பாண்டி கொலை செய்யப்பட்டதற்கு பழிவாங்க எதிர் தரப்பினர் திட்டம் திட்டி வருவது குறித்தும் கண்காணித்து வந்த நிலையில் சில குற்ற சம்பவங்களை தடுத்துள்ளோம். தலைமறைவாக இருந்த ஆல்வின் வேறு சில திட்டங்கள் தீட்டி வந்ததும் தெரிய வந்தது. இந்த நபர் சம்பந்தப்பட்ட வழக்கில் பாதி பேர் சிறையில் உள்ள நிலையில் மற்றவர்கள் முறையாக நீதிமன்றங்களில் ஆஜராகி வருகின்றனர்.
காவலர்கள் துப்பாக்கி எடுத்து சொல்லுவது எங்களுடைய பணியில் ஒரு பகுதி. காவலர்கள் துப்பாக்கி பயன்படுத்துவது சட்டத்தில் உள்ளது. துப்பாக்கியை பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் யாரும் எடுத்து செல்வதில்லை. ஆனால் காவலரின் உயிருக்கு ஆபத்து வரும்போது அதை பயன்படுத்தும் கட்டாயம் ஏற்படுகிறது. அச்சத்தை ஏற்படுத்தும் நோக்கம் என்பதை தாண்டி , காவல்துறை சட்டபடி நடவடிக்கை எடுக்க தயங்காது என தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu