கோவை மாநகரில் பெய்து வரும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
கோவை மாவட்டத்தில் நாள் முழுவதும் பெய்து வரும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. பூமத்தியரேகையை ஒட்டிய இந்தியப்பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில், இலங்கைக்கு தெற்கே, ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது சாரல் மழை பெய்து வந்தது. மேலும் இரவு நேரங்களில் கடும் குளிா் நிலவி வந்தது. இந்நிலையில் இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. மேலும் தொடர்ந்து மிதமான மழை பெய்து வருகிறது. காந்திபுரம், பூமாா்க்கெட், ஆா்.எஸ்.புரம், வடவள்ளி, ராமநாதபுரம், அவிநாசி சாலை, சிங்காநல்லூா், ஒண்டிப்புதூா் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மாநகர் முழுவதும் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. மேலும் அவ்வப்போது சாரல் மழை பெய்து வருவதாலும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அதேசமயம் தொடர்ந்து பெய்து வரும் மழையால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகினர். மேலும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதேபோல கோவை மாவட்டத்தின் புறநகர் பகுதிகளான பொள்ளாச்சி, வால்பாறை உள்ளிட்ட பகுதிகளிலும் மிதமான மழை பெய்து வருகிறது.
கோவை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. அலுவலகம் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் இருசக்கர வாகனங்களில் செல்ல முடியாமல் தவித்தனர். ஏற்கனவே அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக பேருந்து சேவை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மழையாலும் மக்கள் தொடர் பாதிப்பை அடைந்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu