ராமர் மீதான நம்பிக்கையை எந்த ஆட்சியாலும் மாற்ற முடியாது: வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்
ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கோவை ஆர்.எஸ். புரம் அருகேயுள்ள ஸ்ரீ ராமர் பஜனை திருக்கோவிலில் பாஜக சார்பில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. மேலும் கோவில் முன்பு சாலையோரத்தில் ஒரு வாகனத்தில் இருந்து ராமர் கோவில் கும்பாபிஷேகம் நேரலை எல்.இ.டி. திரையில் ஒளிபரப்பப்பட்டது.
இதில் பாஜக தேசிய மகளிரணித் தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் கலந்து கொண்டார். அப்போது அனுமதியின்றி சாலையோரத்தில் வாகனத்தில் இருந்து நேரலை காட்சிகளை ஒளிபரப்ப காவல் துறையினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பாஜகவினருக்கும், காவல் துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வானதி சீனிவாசன், “இந்திய நாட்டின் மிகப்பெரிய வரலாற்று கலாச்சார சிறப்புமிக்க நாள் இன்று. 540 ஆண்டுகளுக்கு பிறகு ராமர் அயோத்தியில் எழுந்தருளி இருக்கிறார். இதற்கான எத்தனையோ லட்சம் பேர் போராட்டம் செய்து தங்களது உயிரை கொடுத்துள்ளனர். இந்த நாடு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஆக்கிரமிப்பாளர்கள் ஆக்கிரமித்து இருந்தனர். ஆக்கிரமிப்பாளர்கள் இந்து மதத்தை அழிக்க வழிபாட்டு தலங்களை சிரழிக்க முயற்சி செய்தனர். அந்த முயற்சி முறியடிக்கப்பட்டு, சனதான தர்மம் மீண்டும் ஒரு முறை தனது சக்தியை நிலைநாட்டிய உள்ளது. ராமர் கோவில் உருவாக வாழ்வை, உயிரை தியாகம் செய்தவர்களுக்கு நன்றி.
ராமர் கோவில் கும்பாபிஷேகம் பிரதமர் மோடி முன்னிலையில் சிறப்பாக நடந்துள்ளது. ராமர் கோவில் இந்திய தேசிய கலாச்சாரத்தின் அடையாளம். காந்தியின் கனவான ராம ராஜ்ஜியம் நோக்கி நாட்டை பிரதமர் மோடி எடுத்து சென்று கொண்டுள்ளார். ராமர் கோவில் உரிமையை உச்ச நீதிமன்றம் தீர்ப்பின் அடிப்படையில் இந்துக்கள் பொறுமையாக, சட்ட ரீதியாக உரிமையை பெற்றுள்ளார்கள்.
இக்கோவில் கட்ட அரசு செலவழிக்காமல், மக்கள் நன்கொடை மூலம் கோவில் கட்டப்பட்டுள்ளது. சீப்பை மறைத்து வைத்தால் கல்யாணம் நின்று விடும் என்பது போல தமிழக அரசு செயல்படுகிறது. கோவில்களில் சிறப்பு பூஜை, அன்னதானம் நடத்த அரசு அனுமதி மறுக்கிறது. நாட்டில் விரும்பும் தெய்வத்தை வழிபட அரசியலமைப்பு சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள உரிமை நிகழ்வை நடத்த அனுமதி மறுக்கப்படுகிறது. நாங்கள் பொய் சொன்னதாக தமிழக அரசு சொன்னது. ஆனால் பொய் பரப்புவது தமிழக அரசு தான்.
ஒருபக்கம் உரிமை மறுக்கவில்லை எனக்கூறிக் கொண்டு, காவல் துறையை வைத்து அரசு மிரட்டல் விடுக்கிறது. மொகலாயர் ஆட்சி, ஒளரங்கசீப் ஆட்சி அல்ல வரி கட்டினால் தான் கோவிலுக்கு செல்ல முடியும் என்ற நிலையை திரும்ப கொண்டு வர முயற்சி செய்கிறது. அது நடக்காது. அத்தனை மக்களையும் அரவணைப்பு தான் ராம் ராஜ்ஜியம். மக்களின் பக்தி உணர்வை அடக்க நினைத்தால், தமிழக மக்கள் பாடம் புகட்டுவார்கள். மக்களின் பக்தி உணர்வை திராவிட மாடல் அரசால் நிறுத்தி விட முடியாது. தமிழகம் ராமர் உடன் தொடர்புடைய மாநிலம். மோடிக்கு கிடைத்து வரும் அன்பு, ஆதரவை பார்க்க சகிக்காமல் அரசு முடக்க நினைக்கிறது. பாஜக மக்களின் உணர்வுகளோடு நிற்கிறது.
கோவையில் நேரலையை ஒளிபரப்ப கூடாது என காவல் துறையினர் கோவில் நிர்வாகத்தை மிரட்டுகிறார்கள். காவல் துறை அதிகாரி ஒருமையில் பேசி மிரட்டுகிறார். ராம நாமம் திமுகவிற்கு பதிலடி தரும். காவல் துறையினர் வழக்கு போட்டால், அதனை சந்திக்க தயார். நீதிமன்றம் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. திராவிட மாடல் இந்துக்களுக்கு எதிரான மாடல் என்பது மீண்டுமொரு முறை நிரூபணமாகியுள்ளது.
ஆளுநர் தனது உணர்வை வெளிப்படுத்தி உள்ளார். கோவில்களில் சிறப்பு பூஜை உள்ளிட்டவை செய்யக்கூடாது என அரசு வாய்மொழி உத்தரவு போட்டுள்ளது. ஒரு சில மடாதிபதி தங்களது சொந்த கருத்துகளை கூறியுள்ளனர். தமிழக அரசு மக்களின் உணர்வை அரசு புரிந்து கொள்ள வேண்டும். அயோத்தி செல்ல சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். 500 வருடத்திற்கு பிறகு ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. 500 ஆண்டுகளுக்கு முன்பு ஆர்.எஸ்.எஸ். இல்லை, பாஜக இல்லை. இதை புரிந்து கொள்ள வேண்டும். ராமர் மீதான நம்பிக்கையை ஒருபோதும் எந்த ஆட்சியாலும் மாற்ற முடியாது. நாங்கள் திமுகவினரை பயப்பட சொல்லவில்லை. சட்டத்திற்கு புறம்பாக பணம் வைத்துள்ளவர்கள் சிறைக்கு செல்கிறார்கள். அவ்வளவு தான்” எனத் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu