புதிய பயிர் ரகங்களை வெளியிட்ட வேளாண்மைப் பல்கலைக்கழகம்..!
புதிய பயிர்களை வெளியிட்ட துணைவேந்தர் கீதாலட்சுமி
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இருந்து ஆண்டு தோறும் விவசாயிகளின் பயன்பாட்டிற்காக புதிய பயிர் ரகங்கள் வெளியிடப்படும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான 20 புதிய பயிர் ரகங்களை வேளாண்மை பல்கலைக் கழக துணைவேந்தர் வெ.கீதாலட்சுமி இன்று வெளியிட்டார். வேளாண் பயிர்கள் மற்றும் தோட்டக் கலை பயிர்கள் என 20 புதிய ரகங்கள் தமிழ்நாடு அரசின் மாநில பயிர் ரகங்கள் வெளியீட்டு குழுவால் அங்கீகரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்த செய்தியாளர் சந்திப்பில் தமிழ்நாடு மேலாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் வெ.கீதாலட்சுமி கூறியதாவது,'வேளாண் பயிர்களில் நெல்லில் இருவழி வீரிய ஒட்டு ரகம் மற்றும் பாசுமதி அல்லாத வாசனை கொண்ட நீள் சன்ன ரகம் என இரண்டு ரகங்களும், தானிய பயிர்களில் இனிப்புச் சோளம் உட்பட நான்கு புதிய ரகங்களும், எண்ணெய் வித்துக்கள், பருத்தி மற்றும் பசுந்தாள் உரப்பயிர் போன்ற பயிர்களில் தலா ஒரு ரகமும் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு பன்னீர் திராட்சை, பலா, வாழை என மூன்று பழப் பயிர்களும், கத்திரி, கொத்தவரை, வெள்ளைத் தண்டுக் கீரை, சிவப்புக் கீரை மற்றும் முருங்கை என ஐந்து காய்கறி பயிர்களும் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், சிவப்புப் புளி மற்றும் தென்னையில் தலா ஒரு ரகமும் வெளியிடப்பட்டுள்ளது. விவசாய பெருமக்கள் இந்த புதிய பயிர் ரகங்களை சாகுபடி செய்து பயன்பெறுமாறு வேளாண்மை பல்கலைக்கழகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது' என தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu