பிட் காயின் முதலீடு ஆசை காட்டி கோவை தொழிலதிபரிடம் ரூ.9 கோடி மோசடி..!
பீளமேடு காவல் நிலையம்
கோவை ராம்நகர் காளிதாஸ் வீதியைச் சேர்ந்தவர் ஜேம்ஸ். தொழிலதிபரான இவர், ஒரு வழக்கு விஷயமாக பீளமேட்டைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் ராஜேஷ், ஆனந்தி ஆகியோரை அணுகினார். பின்னர் இவர்கள் நட்பாக பழகி வந்தனர். அப்போது வழக்கறிஞர் இருவரும் நீதிமன்றத்தில் ஏலத்திற்கு வரும் சொத்துக்களை வாங்கி விற்பனை செய்தால், அதிக லாபம் கிடைக்கும் என்று ஜேம்ஸிடம் ஆசை வார்த்தைகள் கூறி உள்ளனர்.
இதனை நம்பியவர் ஏலத்தில் வரும் சொத்துக்களை வாங்குவதற்காக பல்வேறு தவணையாக லட்சக் கணக்கில் பணம் கொடுத்ததாக தெரிகிறது. இதற்கு இடையில் ஆனந்தி தான் நீதிபதி தேர்வுக்கு பயிற்சி பெற்று வருவதாகவும், வேலையில் சேர்வதற்கு ரூபாய் 25 லட்சம் வேண்டும் என்றும் கூறி ஜேம்ஸிடம் பெற்றதாக தெரிகிறது. கேட்ட போதெல்லாம் பணம் கொடுத்ததால் வழக்கறிஞர் இருவரும் ஜேம்ஸிடம் தொடர்ந்து ஆசை வார்த்தைகளை கூறி வந்தனர்.
இந்நிலையில் அவர்கள் ஜேம்ஸிடம் ஆன்லைன் வர்த்தகத்தில் பிட் காயினில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று கூறி உள்ளனர். இதனை நம்பிய ஜேம்ஸ் ரூபாய் 8 கோடி 64 லட்சத்து 90 ஆயிரத்தை முதலீடு செய்தார். நீண்ட நாட்கள் ஆகியும் லாபத் தொகை எதுவும் வராததால், ஜேம்ஸ் சந்தேகம் அடைந்தார்.
தொடர்ந்து இது குறித்து வழக்கறிஞர் ராஜேஷ், ஆனந்தி ஆகியோரிடம் கேட்டு உள்ளார். அப்போது அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் தகாத வார்த்தைகளால் திட்டியதாக தெரிகிறது. மொத்தம் 9 கோடியே 14 லட்சத்தை இழந்த அவர், இது குறித்து பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu