கோவை சிறையில் சவுக்கு சங்கர் உயிருக்கு ஆபத்து: வழக்கறிஞர் பேட்டி
செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் சவுக்கு சங்கரின் வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன்.
கோவையில் சவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், ”இன்று இந்த வழக்கு சம்பந்தமாக சந்திப்பதற்காக சவுக்கு சங்கரை சிறையில் சென்று பார்த்த போது, அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது தெரியவந்தது. சவுக்கு சங்கரை ஒரு அறையில் அடைத்து கண்களைக் கட்டி பத்துக்கும் மேற்பட்ட வார்டன்கள் பிளாஸ்டிக் பைப்களை துணியால் கட்டி அடித்துள்ளனர். அதில் அவருக்கு வலது கையில் முறிவு ஏற்பட்டுள்ளது. மேலும் எலும்பு முறிவு ஏற்பட்ட கைக்கு இதுவரை எக்ஸ்ரே உள்ளிட்ட எந்த ஒரு சோதனைகளும் எடுக்கப்படவில்லை. அவருடைய விருப்பத்திற்கு மாறாக வலி நிவாரணி மாத்திரைகளை மட்டுமே உட்கொள்ள கூறுகின்றனர்.
இந்த நிலையில் அவரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த அனுமதி அளிக்க வேண்டும். அவரை தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்க்க அனுமதிக்க வேண்டும் எனவும் நீதிபதியிடம் மனு அளித்துள்ளோம். சவுக்கு சங்கர் அந்த யூ டியூப்பிற்கு பேட்டி அளித்தது சரியா தவறா என்பதை எல்லாம் நீதிமன்றம் தான் முடிவு செய்யும். தற்பொழுது மனித உரிமை மீறல்கள் அதிகமாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு காவல் துறை மாநிலமாக மாறி வருகிறது. போலீசார் நினைத்தால் யாரை எது வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலைக்குச் சென்று கொண்டிருக்கிறது. யார் ஒருவர் இந்த அரசுக்கு எதிராகவும் அரசின் அமைப்பிற்கு எதிராகவும் பேசினால் அவருடைய மனித உரிமைகள் மீறப்படுகிறது. சிறையில் இவருக்கு நடக்கும் கொடுமைகளை சாட்சியாக கூறுவதற்கு சக கைதிகள் தயாராக இருக்கின்றனர். இது குறித்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருக்கிறோம்.
தற்போது கோவை சிறை கண்காணிப்பாளராக இருக்கக் கூடிய செந்தில்குமார் கடலூர் சிறையில் கண்காணிப்பாளராக இருந்த நேரத்தில் அவர் மீது வழக்குத் தொடர்ந்தது சவுக்கு சங்கர் தான் என்ற நிலையில் வேண்டுமென்றே கோவையில் வழக்கு பதிவு செய்துள்ளனர். செந்தில்குமாரிடம் சவுக்கு சங்கரை விட வேண்டும் செந்தில்குமார் சவுக்கு சங்கரை கொடுமைப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்திலேயே இதனை செய்திருக்கலாம் என்று சவுக்கு சங்கர் எண்ணுகிறார். கோவை சிறையில் சவுக்கு சங்கர் உயிருக்கு ஆபத்து இருக்கிறது. சவுக்கு சங்கர் சிறையில் மெண்டல் பிளாக் என்று சொல்லக்கூடிய இடத்தில் அடைத்து வைத்துள்ளனர். எனவே இதுகுறித்து உயர் நீதிமன்றத்தை தாங்கள் நாட இருக்கிறோம்” எனத் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu