530 கிராம் தங்க நகைகளை திருடிய தொழிலாளி: காவல் துறையினர் விசாரணை

530 கிராம் தங்க நகைகளை திருடிய தொழிலாளி: காவல் துறையினர் விசாரணை
X

லிங்கேஸ்வரன்

31 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 530 கிராம் தங்க நகைகளை திருடிக் கொண்டு தப்பிச் சென்றார்.

கோவை கடை வீதியை அடுத்த சாமி அய்யர் புது வீதி பகுதியைச் சேர்ந்த வெள்ளிங்கிரி என்பவரின் மகன் கார்த்திகேயன். 30 வயதான இவர் அதே பகுதியில் தங்க நகை பட்டறை நடத்தி வருகிறார். இவரது நகை பட்டறையில் சலீவன் வீதி பகுதியைச் சேர்ந்த லிங்கேஸ்வரன் என்பவர் கடந்த மூன்று ஆண்டுகளாக பணி புரிந்து வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு லிங்கேஸ்வரன் நகை பட்டறையை பூட்டி விட்டு அதன் சாவியை உரிமையாளர் கார்த்திகேயனிடம் கொடுக்காமல் வைத்திருந்தார்.

இதையடுத்து நேற்று அதிகாலையில் லிங்கேஸ்வரன் நகை பட்டறையை திறந்து அங்கு வைக்கப்பட்டு இருந்த 31 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 530 கிராம் தங்க நகைகளை திருடிக் கொண்டு தப்பிச் சென்றார். நேற்று காலை கார்த்திகேயன் தனது நகை பட்டறைக்கு சென்ற போது, நகை பட்டறையில் இருந்த தங்க நகைகள் திருடப்பட்ட விபரம் தெரிய வந்தது. நகைகள் திருடப்பட்டதை அறிந்து கார்த்திகேயன் அதிர்ச்சி அடைந்தார்.

இதைத் தொடர்ந்து கார்த்திகேயன் கடை வீதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் காவல் துறையினர் சலிவன் வீதி பகுதியைச் சேர்ந்த லிங்கேஸ்வரன் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தங்க நகைகளுடன் தலைமறைவான லிங்கேஸ்வரனை காவல் துறையினர் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
வங்கி தேர்வில் முதலிடம் ராசிபுரம் மாணவனுக்கு வாழ்த்துகள் மலர்ந்த வரவேற்பு..!