கொடநாடு கொலை கொள்ளை வழக்கு ஜூன் மாதத்துக்கு ஒத்திவைப்பு
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே கொடநாட்டில் உள்ள மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களாவில்கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொலை, கொள்ளை சம்பவம் அரங்கேறியது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் தற்போது வழக்கு சி. பி. சி. ஐ. டிக்கு மாற்றப்பட்டது. சி. பி. சி. ஐ. டி ஏ. டி. எஸ். பி முருகவேல் தலைமையிலான போலீசார் கொடநாடு வழக்கை மீண்டும் முதலில் இருந்து விசாரித்து வருகின்றனர். சம்பவம் நடந்த இடம்,அங்கு பணிபுரிபவர்கள் என பலரிடமும் விசாரணை நடத்தி உள்ளனர்.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான விபத்தில் இறந்த கனகராஜ் இறப்பதற்கு முன்பு எடப்பாடியில் உள்ள தனது ஆஸ்தான ஜோதிடரை சந்தித்தாக தகவல் வெளியானது. இதையடுத்து அவரையும் இந்த விசாரணை வளையத்திற்குள் கொண்டு வர முடிவு செய்துள்ள
சி. பி. சி. ஐ. டி போலீசார் அவருக்கு அடுத்த மாதம் முதல் வாரத்தில் சம்மன் அனுப்பவும் திட்டமிட்டுள்ளனர். மேலும் ஜெயலலிதாவின் தோழி சசிகலா மற்றும், கவுண்டம்பாளையம் தொகுதி முன்னாள் எம். எல். ஏ. ஆறுக்குட்டியிடமும் விசாரிக்க சி. பி. சி. ஐ. டி போலீசார் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு ஊட்டியில் உள்ள நீதிமன்றத்தில்நடந்து வருகிறது. இந்த வழக்கு இன்று நீதிபதி நாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி நாராயணன், வழக்கினை ஜூன் மாதம் 23-ந் தேதிக்கு ஒத்திவைத்தார். வழக்கு விசாரணையின் போது குற்றம்சாட்டப்பட்ட ஜித்தின்ஜாய், வாளையார் மனோஜ், ஜம்சீர் அலி ஆகியோர் ஆஜராகி இருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu