கொடநாடு வழக்கில் வரும் 28 ஆம் தேதி இடைக்கால அறிக்கை தாக்கல்

கொடநாடு வழக்கில்  வரும் 28 ஆம் தேதி இடைக்கால அறிக்கை தாக்கல்
X

கொடநாடு எஸ்டேட் (பைல் படம்)

இந்த வழக்கில் பல்வேறு புதிய தகவல்களும் சி. பி. சி. ஐ. டி. போலீசாருக்கு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது

கோவை மண்டலமான கொடநாட்டில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட் பங்களா உள்ளது. இந்த பங்களாவில் கடந்த 2017-ம் கொள்ளை சம்பவம் அரங்கேறியது. இதனை தடுக்க முயன்ற காவலாளி ஓம்பகதூர் என்பவர் கொல்லப்பட்டார். மற்றொரு காவலாளியான கிருஷ்ணபகதூர் உயிர் தப்பினார். இந்த கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக கேரளாவை சேர்ந்த சயான், மனோஜ் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

முக்கிய குற்றவாளியான சேலத்தை சேர்ந்த கனகராஜ் விபத்தில் இறந்து விட்டார். இந்த வழக்கில் இதுவரை 316 பேரிடம் விசாரணை நடந்துள்ளது. தற்போது இந்த வழக்கினை சி. பி. சி. ஐ. டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை ஏ. டி. எஸ். பி முருகவேல் தலைமையிலான அதிகாரிகள் பல்வேறு தரப்பினரிடமும் விசாரணை நடத்தி உள்ளனர்.

விசாரணையின்போது இந்த வழக்கில் பல்வேறு புதிய தகவல்களும் சி. பி. சி. ஐ. டி. போலீசாருக்கு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக கொலை, கொள்ளை நடந்த இடம் மற்றும் ஜெயலலிதாவின் அறையில் ஆய்வு செய்து முக்கிய ஆவணங்களை கைப்பற்றி உள்ளனர். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நபர்களின் 8 செல்போன்கள் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டிருந்தன. அதனை ஆய்வு செய்து, அதில் உள்ள விபரங்களை கொண்டு விசாரணை நடத்துவதற்காக அந்த செல்போன்களை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என சி. பி. சி. ஐ. டி. போலீசார் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த நிலையில் கொடநாடு பங்காளவின் 2 வரைபடங்கள், 3 புகைப்படங்கள், ஜெயலலிதா சசிகலாவின் அறைகள் மற்றும் ஸ்டோர் ரூம் ஆகியவற்றின் சில பொருட்கள் என 9 பொருட்களை சி. பி. சி. ஐ. டி. போலீசார் கைப்பற்றி உள்ளனர். இந்த பொருட்கள் அனைத்தையும் நேற்று ஊட்டி செசன்ஸ் கோர்ட்டில் சி. பி. ஐ. டி. போலீசார் ஒப்படைத்தனர். இதற்கிடையே வருகிற 28-ந் தேதி ஊட்டி செசனஸ் கோர்ட்டில் கொடநாடு வழக்கு விசாரணைக்கு வர உள்ளது. அந்த சமயம் சி. பி. சி. ஐ. டி. போலீசார் இதுவரை நடத்திய விசாரணையின் அடிப்படையில் இடைக்கால விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

இது தொடர்பாக சி. பி. சி. ஐ. டி. போலீசார் கூறும்போது, கொடநாடு பங்களாவில் கொள்ளை எதற்காக நடந்தது. இதன் பின்னணியில் இருக்கும் நபர்கள் யார் என்பது குறித்த ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அதன் அடிப்படையில் அவர்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது வரை நடத்தப்பட்டுள்ள விசாரணையை அறிக்கையாக வருகிற 28-ந் தேதி கோர்ட்டில் தாக்கல் செய்ய உள்ளோம் என்றனர்.

கொடநாடு கொலை, கொள்ளை தொடர்பாக கொடநாடு எஸ்டேட்டின் மேலாளரான நடராஜிடம் சி. பி. சி. ஐ. டி. ஏ. டி. எஸ். பி முருகவேல் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர். அவரிடம் பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரித்த சி. பி. சி. ஐ. டி. போலீசார் அதனை பதிவும் செய்து கொண்டனர். செல்போன்களை விசாரணைக்கு கேட்டது, கொடநாடு பங்களாவில் கைப்பற்றப்பட்ட 9 பொருட்களை கோர்ட்டில் ஒப்படைத்தது என அடுத்தடுத்து சி. பி. சி. ஐ. டி. போலீசார் மேற்கொண்டு வரும் நடவடிக்கையால் கொடநாடு வழக்கு மீண்டும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இடைக்கால அறிக்கை தாக்கல் செய்யும்பட்சத்தில் யார் யாரிடம் விசாரணை நடந்தது, புதிதாக யாரிடமும் விசாரிக்கப்பட்டுள்ளதா? என்ற தகவல்கள் தெரியவரும்.

Tags

Next Story
மக்களே உஷார் ....! மழைக்காலத்துல பல நோய்கள் வருதாம் !... அத எதிர்கொள்ள உங்களுக்காக சில டிப்ஸ்....