புற்றுநோய் விழிப்புணர்வு தகவல்களை தரும் 'டைனமிக் கியூ ஆர் கோடு’ - தனியார் மருத்துவமனையில் அறிமுகம்
Coimbatore News- டைனமிக் கியூ ஆர் கோடு அறிமுகம்
Coimbatore News, Coimbatore News Today- கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் உலக புற்றுநோய் தினம் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ’டைனமிக் க்யூஆர் கோடு’ தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் முழுமையான புற்றுநோய் விழிப்புணர்வுத் தகவல்களுடன், பெண்களுக்கான ஒரு வருட கால இலவச மேமோகிராம் ஸ்கிரீனிங் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் மேற்கு மண்டல காவல் துறை தலைவர் பவானீஸ்வரி கலந்து கொண்டு இத்திட்டத்தினை துவக்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த புற்றுநோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் பி. குகன் கூறியதாவது,
இந்தியாவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14.67 லட்சமாக உள்ளது. அடுத்த வருடம் 15 லட்சத்தை கடக்கும் என தகவல் தெரிவிக்கின்றன. பெண்களில், மார்பகப் புற்றுநோய் மிகவும் பொதுவான புற்றுநோயாகக் காணப்படுகிறது.
அதே போல் ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் பொதுவாக காணப்படுகிறது. கருத்து கணிப்புகளின் படி, ஒவ்வொரு 22 பெண்களில் ஒருவருக்கு மார்பகப் புற்றுநோய் வரக்கூடும் என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. பெண்கள் தங்கள் மார்பகங்களில் ஏதேனும் சிறிதளவு வித்தியாசத்தைக் கண்டால், மருத்துவ நிபுணருடன் கலந்து ஆலோசித்து சரியான பரிசோதனைகள் மூலம் எதனால் எந்த மாற்றம் என்பதைவும் இதனால் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது என்பதை உறுதிப்படுத்த வேண்டும். தேவையான மருத்துவ வழிகாட்டுதல் மற்றும் முன்னெச்சரிக்கையுடன் இருந்தால் பெண்கள் மார்பக புற்றுநோயை வெல்ல முடியும். துரதிருஷ்டவசமாக, பெரும்பாலான பெண்கள் பயம் அல்லது தயக்கம் காரணமாக மருத்துவரை அணுகுவதில்லை.
இதனால் மார்பக புற்றுநோய் சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் 50% பேர் முற்றிய நிலைகளுடன் வருகிறார்கள். மார்பக புற்றுநோயின் இத்தகைய நிலைகளில் உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க முடியும் ஆனால் புற்றுநோயிலிருந்து அவர்களை முழுமையாக காப்பாற்றுவதற்கான வாய்ப்புகள் குறைவு. ஆண்களில், நுரையீரல் புற்றுநோய், உணவுக்குழாய் புற்றுநோய், வாய்வழி குழி புற்றுநோய், தொண்டை புற்றுநோய் போன்றவற்றிற்கு முக்கியமாக காரணம் புகையிலை மற்றும் ஆல்கஹால் பயன்பாடாகும். புகையிலை பயன்பாட்டை தவிர்த்தால், 60% புற்றுநோய் பாதிப்புகளைக் குறைக்கலாம். இந்தியாவில், குறிப்பாக கிராமப்புறங்களில் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு குறைவாக இருப்பதால், நம் நாட்டில் புற்றுநோயின் பாதிப்பு அதிகரித்து வருகிறது.
ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையம் தொடக்கத்தில் இருந்து கோவை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகளில் பல்வேறு புற்றுநோய் விழிப்புணர்வு பிரச்சாரங்களை தொடர்ந்து நடத்தி வருகிறது. பல ஆண்டுகளாக எண்ணற்ற டிஜிட்டல் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம். புற்றுநோய் விழிப்புணர்வு ஆடியோக்கள், அனிமேஷன் வீடியோக்கள், மின் புத்தகங்கள், இணையதளங்கள், ஃபிளிப் புக்ஸ் போன்றவற்றை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அறிமுகப்படுத்தினோம். இவை அனைத்து புற்றுநோய்களையும், அவற்றின் வகைகள், காரணங்கள், அறிகுறிகள், சிகிச்சை முறைகள் போன்றவற்றை அனைவரும் பற்றி எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் உருவாக்கி இருந்தோம்.
இந்த ஆண்டும் எங்களின் விரிவான புற்றுநோய் விழிப்புணர்வு குறித்த அனைத்தையும் ஒரே தளத்தின் கீழ் கொண்டு வந்துள்ளோம். இன்று நாங்கள் அறிமுகப்படுத்திய டைனமிக் க்யூஆர் குறியீட்டை எந்தவித கட்டணமும் இன்றி ஸ்கேன் செய்து புற்றுநோய் குறித்த அனைத்து தகவல்களையும் தமிழ் மற்றும் ஆங்கிலம் மொழிகளில் ஆடியோ, வீடியோ முறையில் பெறமுடியும். 45 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பெண்கள் மார்பக புற்றுநோய் பரிசோதனை செய்யலாம். மேமோகிராம் ஸ்கிரீனிங் தேவைப்படுபவர்கள் அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இலவசமாகப் பெறலாம்.
புற்றுநோய் பற்றிய அதிக விழிப்புணர்வை உருவாக்க தொடர்ந்து இது மாதிரியான முயற்சிகளை நாங்கள் மேற்கொள்கிறோம். பொதுமக்கள் உடல் எடை குறைவு, தொடர் இருமல், தொடர் காய்ச்சல் உள்ளிட்டவற்றால் பாதித்தால் உடனடியாக மருத்துவர்களை அனுக வேண்டும். உடல் பயிற்சி, உணவு பழக்க வழக்கம், சத்தான உணவு உண்பது என உடல் ஆரோக்கியத்தில் பொதுமக்கள் கவனம் செலுத்த வேண்டும் எனத் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu